நிராகரிப்புகளை கடந்து பயணிக்கிறேன்

நன்றி குங்குமம் தோழி

ஒரு குழந்தை சிறப்புக் குழந்தையாக பிறந்து விட்டால் ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கிறீர்கள். அவர்களும் வாழவேண்டாமா? அவர்களை வெளியே கொண்டு வாருங்கள். எங்களைப் போன்றவர்களை பார்த்து, அவர்களும் மாற வேண்டும் என்று பேசத் தொடங்கிய லெக்ஷ்மி பிரபாவுக்கு இருப்பது மூளை முடக்குவாதம்(cerebral palsy).

மூளை முடக்குவாதம் என்றதுமே ‘பேரன்பு’ படத்தின் அமுதவனும், பாப்பாவும் உங்கள் நினைவிற்கு வந்தால் தவறு. நம் நாயகி லெக்ஷ்மி பிரபா பெற்றோர் வழிகாட்டுதலில் முயற்சித்து, இன்று சென்னை நெற்குன்றத்தில் குழந்தைகளுக்கான மாண்டிசோரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.கூடவே தீவிர மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான பாரா போஸியா விளையாட்டில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சென்று பிசி2 பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நீச்சல் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன் என்கிறார் குதூகலத்திற்கு குறைவில்லாமல்.

என்னைச் சுற்றி எப்போதும் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றவர், குழந்தையோடு குழந்தையாய் அமர்ந்து சிரித்துப் பேசத் தொடங்கினார். வெளியில் செல்ல நான் வீல்சேர் பயன்படுத்தினாலும் வீட்டிற்குள் பெரும்பாலும் காலிஃபர் அணிந்து நடக்கவே முயற்சிக்கிறேன். என்னுடைய முயற்சியை நான் எதற்காகவும் கைவிட்டதில்லை.

மூளை முடக்குவாதத்தில் எனக்கிருப்பது செலிபிரள் டிப்ளெஜியா (cerebral diplegia). அதாவது நரம்பு மற்றும் எலும்பு இரண்டையும் சேர்த்தே எனக்கு கவனிக்க வேண்டும். கூடவே இதயப் பிரச்சனையும். குழந்தையில் என் வளர்ச்சி மெதுவாய் இருக்க, கால்களும் நேராக இல்லை. ஹெட் கண்ட்ரோல் இல்லாமல் இருக்க, பெற்றோர் வீட்டில் கார்னர் இடமாகப் பார்த்து என்னை உட்கார வைத்தனர்.

இல்லையென்றால் நான் கீழே சாய்ந்துவிடுவேன். என் குறை கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே ஒவ்வொரு ஸ்டெப்பாக பெற்றோர் எடுக்கத் தொடங்கினர். மருத்துவர்கள் அறிவுறுத்தலில் எனது கால்களில் அடுத்தடுத்து நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இப்போது எனக்கு வயது 33. என் 2 வயதில் பெரிய அளவுக்கு மருத்துவ வழிகாட்டுதல்கள் இல்லாத காலம் அது.

அரசு மருத்துவமனைக்கு அம்மா என்னை தினமும் அழைத்துச் செல்ல, அங்கிருந்த மருத்துவர்களின் வழிகாட்டுதலில், தரமணியில் இருக்கும் தமிழக அரசின் ஸ்பாஸ்டிக் சொசைட்டி (spastic society of tamilnadu) அமைப்பை அணுகினோம். அங்கு என்னைப் போன்ற குழந்தைகள் நிறைய இருந்தனர். அங்கு தெரபிகள் அனைத்தும் இலவசமாகக் கொடுத்தனர். தொடர்ந்து அங்கு சென்றதில் உடல் ரீதியான மாற்றங்கள் கிடைத்தது. கூடவே செலிபிரள் பால்ஸி குறித்த தெளிவும் கிடைத்தது.

முப்பது வருடத்திற்கு முன்பு நான் வசிக்கும் பாரிமுனையில் இருந்து தரமணி செல்வது அத்தனை சுலபமில்லை. அடையாறு சென்ற பிறகே தரமணி செல்ல முடியும். அடையாறுகூட அப்போது அத்தனை வளர்ச்சி அடையவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் தரமணிக்கு வர மறுப்பார்கள். உடல்நலம் சரியில்லாத என்னைத் தூக்கிச் சுமந்தபடியே என் அம்மா நிறைய கஷ்டங்களை அப்போது அனுபவித்தார். கூடவே அப்பாவும் என்றபடி, தன் அம்மா கலைவாணி மற்றும் அப்பா ராமஜெயத்தை நினைவுகூறுகிறார் லெக்ஷ்மி பிரபா.

பிறகு கீழ்பாக்கத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காகவே இயங்கும் மித்ரா பள்ளியில் சேர்க்கப் பட்டேன். அங்கே தெரபிகளோடு படிப்பும் சொல்லிக் கொடுத்தார்கள். அங்கே போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிறைய இருந்தார்கள். அவர்களோடு பேசத் தொடங்கி பிறகு அப்படியே ஸ்டிக் வைத்து மெதுமெதுவாய் நடக்க ஆரம்பித்தேன். கைகளையும் பயன்படுத்த தொடங்கி இருந்தேன்.

9 வயதில் என்னை கோட்டூர்புரத்தில் உள்ள வித்யாசாகர் சிறப்புப் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் சேர்ந்தபிறகு மாற்றங்கள் நிறையவே இருந்தது. படிப்பிலும் ஆர்வம் கூடியது. மாற்றுத் திறனாளிகளுக்கான நேஷனல் ஓப்பன் பள்ளியில் ஸ்க்ரைப்(scribe) உதவியோடு 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகளை எழுதினேன். கம்ப்யூட்டர் இயக்கவும் கற்றுக் கொண்டேன்.

வித்யாசாகர் பள்ளியின் இயக்குநர் பூனம் நடராஜனை என் ரோல்மாடலாக நினைத்து, அவரைப் போன்றே மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி ஒன்றை நடத்த ஆர்வம் காட்டி, பெற்றோரிடத்திலும் என் விருப்பத்தை தெரிவித்தேன். +2 முடித்ததுமே அடையாறு சத்யா ஸ்டுடியோவிற்கு அருகே உள்ள மாண்டிசோரி பயிற்சி பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள்.

2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி எடுத்தது பயனாக இருந்தது. அடையார் கேன்சர் மருத்துவமனையில் குழந்தைகளுக்கென இயங்கும் கேன்சர் வார்டு பார்ப்பதற்கு தனியாக ஸ்கூல் மாதிரியே இருக்கும். அதைப் பார்த்து குழந்தைகளுக்கு மத்தியில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நிறைய வந்தது. ஏனென்றால் குழந்தைகள் என்றால் எனக்கு எப்போதும் பிடிக்கும்.

அதைத் தொடர்ந்து தண்டையார் பேட்டையில் உள்ள மாண்டிசோரி முறையிலான பால்வாடி ஒன்றில் தன்னார்வலராக 4 வருடம் பணியாற்றினேன். அந்த வேலை ரொம்பவே சவால் நிறைந்ததாக இருந்தது. காரணம் நான் குழந்தைகளுக்கு மத்தியில் பணியாற்ற வேண்டுமென்றால், உடன் பணி செய்பவர்களும் மற்றவர்களும் என் தோற்றம் பார்த்து என் மனசு பாதிக்க எதையாவது பேசினால், பெரிதாய் எடுக்கக்கூடாது என ஃபீல்ட் அலுவலர் எனக்கு அறிவுறுத்தி இருந்தார்.

ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணாய் பல உதாசீனங்களையும், நிராகரிப்புகளையும் நான் அங்கே சந்திக்க நேர்ந்தது. ஆரம்பம் ரொம்பவே நெருடலாய் கடக்க, எனது காதில் விழுகும்படியாகவே என்னை பலரும் கேலி பேசினார்கள். நான் அவற்றை பெரிதாக எடுக்கவில்லை. அமைதியாக என் வேலையைச் செய்தேன். காரணம் என் இலக்கு எப்போதும் குழந்தைகள்.. குழந்தைகள்..

குழந்தைகள் மட்டுமே. குழந்தைகள் என்னிடம் ரொம்பவே ஒட்டிக்கொண்டார்கள். எனது அர்ப்பணிப்பை பார்த்த மற்றவர்களும் என்னிடத்தில் நட்பு பாராட்டத் தொடங்கினார்கள் என்றவர், என்னை ஏற்கும் மனோநிலை மற்றவர்களிடம் இல்லை என்றாலும், நிராகரிப்புகளை ஏற்கும் பக்குவம் என்னிடத்தில் நிறையவே இருந்தது என்கிறார் புன்னகைத்து.

நெற்குன்றத்தில் இருந்த எங்கள் சொந்தக் இடத்தில் மாண்டிசோரி பள்ளியினை நடத்த கட்டிடம் ஒன்றை அப்பா எனக்காக கட்டிக்கொடுத்தார். ஆரம்பத்தில் தயக்கத்துடன் பெற்றோர் தங்களின் குழந்தைகளை எனது பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

இப்போது மூன்று வயதிற்குட்பட்ட 22 குழந்தைகள் என்னிடத்தில் படிக்க வருகிறார்கள். அதில் ஒருசில சிறப்புக் குழந்தைகளும் உண்டு. சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை என்றாலும் பள்ளிக்கு வர அவர்கள் அடம் பிடிக்கிறார்கள் என்று குழந்தைகளை கட்டி அணைத்தபடி அன்பை வெளிப்படுத்துகிறார். மாற்றங்கள் முயற்சித்தால் மட்டுமே வரும்... அந்த வகையில் லெக்ஷ்மி பிரபா மாற்றத்திற்கான நம்பிக்கை மனுஷி.

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட்பால்

Related Stories: