திருப்பூர் நொய்யல் ஆற்றில் மழைநீருடன் கலந்து ஓடிய சாயக்கழிவுநீர்: மழை காலத்தை குறி வைக்கும் முறைகேடு ஆலைகள்

திருப்பூர்:  திருப்பூர் நொய்யல் ஆற்றில் மழை நீருடன், சாயக்கழிவு நீர்  கலந்தோடியது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர்  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இதில் கணிசமான அளவிற்கு சாய, சலலை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்களும்  செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் துணிகளுக்கு சாயமேற்றி  கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறைகேடாக திருப்பூரில் செயல்பட்டு வருகிற சாய, சலவை ஆலைகள் அடிக்கடி நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்து  விட்டு விடுகின்றன. இதனால் நீர்நிலைகள் மாசுபட்டு வருகின்றன.

திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு பரவலாக மழை  பெய்து வருகிறது. இந்த மழையை பயன்படுத்தி முறைகேடாக இயங்கும் சாய ஆலைகள்  சாயக்கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்துவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் கரைத்தோட்டம் பகுதியில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து  சென்றது. இது சமூக ஆர்வலர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து  சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: திருப்பூர் கரைத்தோட்டம் பகுதியில் நொய்யல்  ஆற்றில் சாயக்கழிவுநீர் தண்ணீருடன் கலந்து சென்றது. அடிக்கடி இந்த சம்பவம்  நடந்து வருகிறது. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால்,  நீர்நிலைகள் பாழாகும். இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகளுக்கும் நோய்  தொற்று ஏற்படும். முறைகேடாக இயங்கி வருகிற இந்த சாய, சலவை ஆலைகள்  மழைக்காலங்களைதான் குறி வைத்து இவ்வாறு செய்து வருகின்றன. இதனால்  மழைக்காலங்களில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வை தீவிரப்படுத்த  வேண்டும். நீர்நிலைகளில் சாயக்கழிவுநீரை திறந்து விடுகிற நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories: