மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை: சென்னை உயர் நீதிமன்றம் வேதனை..!

சென்னை: மரணத்துக்கு பிறகும் கூட சாதி  மனிதனை விடவில்லை என்று வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது கணவருக்கு சொந்தமான நிலத்துக்குச்  செல்லும் சாலையில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை  விதிக்க வேண்டும் என்றும் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ளபோதிலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றப்படுகிறது. அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, மரணம் அடைந்த பிறகும்கூட சாதி மனிதனை விடவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது வேதனையான விஷயம். மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடலையும் தகனம் செய்யவும், அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும். மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும். மயானம் என அறிவிக்கப்படாத பகுதிகளில் உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Related Stories: