கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் பணியின் போது கொசஸ்தலை ஆற்றில் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு  நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெறுகிறது. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி செல்வதோடு, சுற்றுச்சூழல் அனுமதியும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறி காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்து கன்வேயர் பெல்ட்டை கொண்டு செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நீர்வழிப்பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர் வழிப் பாதையில் கொட்டப்பட்ட 80 சதவீத கட்டுமான இடிபாடுகள், கட்டுமான பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீர்வழிப்பாதையில் கிடக்கும் கட்டுமான இடிபாடுகள், கட்டுமான பொருட்கள் அத்தனையையும் அப்புறப்படுத்த வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரோ அல்லது முதன்மை செயல் அதிகாரியோ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: