துபாயில் சரவெடி காத்திருக்கு...! வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து இன்று இரவு பலப்பரீட்சை

துபாய்: டி.20 உலக கோப்பையில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. நம்பர் 1 அணியான இங்கிலாந்து கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மோர்கன் பார்ம் இழந்து தடுமாறினாலும் பட்லர், பேர்ஸ்டோ, ஜேசன்ராய், டேவிட் மாலன், மொயின் அலி என அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் டேவிட் வில்லி, கிறிஸ்வோக்ஸ், ஜோர்டான், அடில் ரஷித், மார்க்வுட் மிரட்டலாம். மறுபுறம் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ்கெய்ல், இவின் லீவிஸ், ரஸ்சல், பூரன், ஹெட்மயர் என அதிரடி சூரர்கள் உள்ளனர்.

ஆனால் இவர்களின் ஆட்டத்தை ஒருபோதும் கணிக்கமுடியாது. யாரும் நிலையான பார்மில் இல்லை. ரஸ்சல் காயத்தில் இருந்து மீளாதது பின்னடைவுதான். பந்துவீச்சில் பிராவோ, ரவி ராம்பால், ஒபேட் மெக்காய், சுழலில் ஹைடன் வால்ஷ் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 11ல் வெஸ்ட்இண்டீஸ், 7ல் இங்கிலாந்து வென்றுள்ளன. உலக கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் மோதியதில் அனைத்திலும் வெஸ்ட்இண்டீசே வென்றுள்ளது. சமபலத்துடன் உள்ள இரு அணிகளும் மோதுவதால் வெற்றியுடன் தொடங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்றைய போட்டியில் சரவெடிபோல் பந்துகள் நாலாபுறமும் பறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>