பழுதான கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலம் பழுதாகி உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சியிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய ரோட்டில் கோட்டூர்ரோடு பிரதான சாலையாக உள்ளது. இங்குள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக வால்பாறை, கோட்டூர், ஆழியார், சமத்தூர், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லலாம். இதனால் பகல் மற்றும் இரவு நேரம் என தொடர்ந்து  வாகன போக்குவரத்து உள்ளது.

 இந்த மேம்பாலத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்ததுடன், சில இடங்களில் பெரிய அளவில் குழியானது. அடிக்கடி விபத்து நேரிட்ட சம்பவமும் நடந்தது. இதையடுத்து, சேதமான பகுதிகளை பேட்ஜ் ஒர்க்கு மூலம் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மேம்பாலத்தின் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஜல்லி சிதறி கிடப்பதுடன், குழிபோன்ற பள்ளமான இடங்களில் வரும் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர்.

மேலும், மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள கம்பத்தில் இருக்கும் மின் வளக்குகள், அடிக்கடி எரியாத நேரத்தில் அந்த வழியாக செல்வோர் அச்சமடைகின்றனர். கடந்த வாரத்தில், இருசக்கரத்தில் வந்த இருவர், மேம்பாலத்தில் சேதமான பகுதியில் இறங்கி ஏறும்போது தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இருப்பினும் பெரிய அளவில் விபரீத சம்பவம் நடப்பதை தவிர்க்க, கோட்டூர்ரோடு ரயில்வே மேம்பாலத்தில் பள்ளமான இடங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, வாகன ஓட்டிகளின் அச்சத்தை போக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: