தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் மரணம் ஏற்படுவதில்லை; நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரும்பாலும் மரணம் ஏற்படுவதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 50,000 இடங்களில் 6வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஏற்கனவே உள்ள வேறு சில பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் 4% மக்களுக்கு மட்டுமே இறப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் மூன்றாவது அலை வராது என உறுதியாக கூற முடியாது என்றும் மக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மட்டுமின்றி மழைக்காலம் தொடங்குவதால் பருவகால நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related Stories:

More
>