சென்னையில் அரசு பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: பொதுமக்கள் நெகிழ்ச்சி

சென்னை: சென்னை கண்ணகி நகர் பகுதியில் பேருந்தில் ஏறி, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த  பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, மெகா கொரோனா  தடுப்பூசி  முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது.  அதன்படி,  தமிழகம் முழுவதும் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள்  நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள்  போடப்பட்டுள்ளது. இதற்கிடையே  கடந்த 17ம் தேதி நடைபெற இருந்த 6வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்  திடீரென்று ரத்து செய்யப்பட்டது.

பிறகு இந்த  முகாம் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை கண்ணகி நகர் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். கண்ணகி நகரில் அடுத்தடுத்த பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் பேசினார்.

பின்னர், M19B தியாகராய நகர் - கண்ணகி நகர் செல்லும் பேருந்தில் எறி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், பெண் பயணிகளிடம் பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய ஆய்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: