சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100ஐ தாண்டியது: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100ஐ தாண்டியது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.100.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 104.22-க்கும், டீசல் ரூ.100.25-க்கும் விற்பனையாகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விலைவாசி உயர்வு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள், சமையல் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட கனரக வாகன போக்குவரத்தை மையப்படுத்தி நடைபெற கூடிய சரக்கு போக்குவரத்திற்கு இந்த டீசல் விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டியது. தமிழக அரசு 3 ரூபாய் விலை குறைப்பை அறிவித்த பிறகு 100 ரூபாய்க்கு கீழ் தமிழகத்தில் பெட்ரோல் விலை விற்கப்பட்டுவந்த நிலையில் நாள் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தி வந்ததின் அடிப்படையில் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனையாகிக்கொண்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் டீசல் விலை கடந்த வாரமே 100 ரூபாயை தொட்டுவிட்டது.

திண்டுக்கல், கடலூர், ஊட்டி போன்ற இடங்களில் 100 ரூபாயை கடந்து விற்பனையாகக்கூடிய சூழலில் சென்னையில் மட்டும் 100 ரூபாயை நெருங்கி காணப்பட்டது. இன்று காலை சென்னையில் டீசலின் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படக்கூடிய விலை உயர்வை அடிப்படையாக வைத்து பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஒரு வாரங்களாக 14 நாட்களில் 2 தினங்கள் மட்டுமே விலை மாற்றம் என்பது செய்யப்படவில்லை. மற்ற அனைத்து நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டே வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் இன்று டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

தமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 36 காசு அதிகரித்து ரூ.100.02க்கு விற்பனையாகிறது. புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 34 காசு அதிகரித்து ரூ.104.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: