செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுகவினர் கைப்பற்றினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 3,208 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது.  அதில், 11 ஊராட்சி மன்ற தலைவர்கள், 186 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 197 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற 3,011 பதவிகளுக்கு பல அரசியல் கட்சி, சுயேட்சையாக 10,884 பேர் போட்டியிட்டனர். அதில், மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுத்த 3,208 பேருக்கு, பதவி பிரமாணம் நடந்தது. இந்நிலையில், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், மாவட்ட குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. ஆனால், லத்தூர் ஒன்றியத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னையால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மற்ற இடங்களில், மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், செங்கல்பட்டு மாவட்ட தலைவராக செம்பருத்தி துர்கேஷ் (திமுக), துணை தலைவராக காயத்திரி அன்புசெழியன் (திமுக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களாக நித்யா, ராஜலட்சுமி, ராமமூர்த்தி, பால்ராஜ், அரி, மனோகரன், அமுதா, பொற்கொடி, வனிதா, பத்மா, சிவராமன் ஆகியோர் வெற்றி பெற்று, கடந்த 20ம் தேதி பதவி ஏற்றனர். இதையடுத்து, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தத. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி முன்னிலையில் நடந்த வாக்குப் பதிவில் 11 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும் ஆஜராகி தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

பின்னர், வாக்குப் பெட்டிகளில் இருந்த, வாக்கு சீட்டுகளை ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில் 11 வாக்குகளும் படப்பை மனோகரனுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மனோகரன் மாவட்ட தலைவராக வெற்றி பெற்றதாக அறிவித்து, வெற்றிச் சான்றிதழை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். துணை தலைவர் பதவிக்கு நித்யா சுகுமார் வெற்றி பெற்றார். மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகரன், துணைத்தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் கட்சியினருடன் அண்ணா நினைவு இல்லம் சென்றனர். அங்குள்ள அண்ணா சிலை, மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பரபரப்பாக நடைபெற்ற ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரே வாக்குகள் பெற்றதால் தேர்தல் நடத்தும் அலுவல் கோபி முன்னிலையில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வில் திமுக வேட்பாளர் கருணாநிதி ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  மாலதி துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்திரமேரூர்: உத்திரமேரூரில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. 22 ஒன்றிய கவுன்சிலர்களில் 17 திமுக, 1 திமுக கூட்டணியும் கைப்பற்றியது. மீதமுள்ள 3 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதைதொடர்ந்து, ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.

அதில் ஒன்றியக் குழுத் தலைவராக ஹேமலதா ஞானசேகரன், ஒன்றியக் குழு துணைத் தலைவராக வசந்தி குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் பதவி ஏற்று கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக்குழு தலைவருக்கு திமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, சுயேட்சையாக மதுரமங்கலத்தை சேர்ந்த எல்லம்மாள் குணசேகரன் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டனர். ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10.15 மணிக்கு துவங்கியது. இதில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் அங்கிருந்த பெட்டியில் வாக்குச்சீட்டினை போட்டனர். பின்னர் அந்த பெட்டியை திறந்து வாக்குகளை எண்ணியபோது, 2 பேருக்கும் சமமான வாக்குகள் கிடைத்தன.

இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 2 பேரது பெயர்களை எழுதி, சீட்டு குலுக்கி தேர்வு செய்தனர். அதில், திமுக சார்பில் வேட்பாளர் கருணாநிதி பெயர் வந்தது. அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் 2 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். மறைமுக வாக்குப்பதிவு தேர்தல் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலையில் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற இருந்தது. போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்க பெரும்பான்மை இல்லாததால் தேர்தல் தேதி குறிப்பிடாமல், தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றியக்குழு தலைவர்கள், துணை தலைவர்கள் விவரம் வருமாறு.

ஒன்றியம்            தலைவர்            துணை தலைவர்

காட்டாங்கொளத்தூர்        உதயா கருணாகரன் (திமுக)    ஆராமுதன் (திமுக)

திருக்கழுக்குன்றம்        ஆர்.டி.அரசு (திமுக)        எஸ்.ஏ.பச்சையப்பன் (திமுக)

திருப்போரூர்        இதயவர்மன் (திமுக)        சத்யா சேகர் (திமுக)

அச்சிறுப்பாக்கம்        கண்ணன் (திமுக)        விஜயலட்சுமி (திமுக)

புனிததோமையர் மலை    சங்கீதா பாரதிராஜன் (திமுக)    பிரசாத் (திமுக)

மதுராந்தகம்        கீதா கார்த்திகேயன் (அதிமுக)    குமரவேல் (அதிமுக)

சித்தாமூர்            ஏழுமலை (திமுக)        தேர்தல் ஒத்தி வைப்பு

காஞ்சிபுரம்        மலர்க்கொடி குமார் (திமுக)    திவ்யப்பிரியா (திமுக)

குன்றத்தூர்        சரஸ்வதி

            மனோகரன்(திமுக)        உமாமகேஸ்வரி (திமுக)

ஸ்ரீபெரும்புதூர்        கருணாநிதி (திமுக)        மாலதி (திமுக)

உத்திரமேரூர்               ஹேமலதா ஞானசேகரன் (திமுக)    வசந்தி குமார் (திமுக)

தேர்தல் அலுவலர் மயங்கி பலி

வாலாஜாபாத் ஒன்றியம், தாங்கி ஊராட்சியில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில், நெய்குப்பம் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் அரி (49) என்பவர் தேர்தல் அலுவலராக பணியாற்றினார். தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, ஐயம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரி பரிதாபமாக இறந்தார். இதனால் அங்கு துணை தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: