சிறையில் உள்ள பிரபல ரவுடியின் மனைவி துணை தலைவராக போட்டியின்றி தேர்வு

தாம்பரம்: தாம்பரம்  அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் சூர்யா (34). பிரபல ரவுடி. இவர்  மீது 50க்கும் மேற்பட்ட  வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பாஜவில் இணைந்த சூர்யா, தற்போது சிறையில்  உள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்  நெடுங்குன்றம் ஊராட்சி, 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி  சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜெயலட்சுமி என்பவர் மட்டும்  போட்டியிட்டு, வேட்புமனுவை திரும்ப பெற்றார். இதனால்  விஜயலட்சுமி, போட்டியின்றி வெற்றி பெற்றார்.

கடந்த  20ம் தேதி விஜயலட்சுமி பதவியேற்றார்.  அப்போது மேடையிலிருந்து  விஜயலட்சுமி இறங்கியபோது, ஓட்டேரி போலீசார்,  பழைய வழக்கில் அவரை கைது செய்தனர். இந்நிலையில்,  நெடுங்குன்றம் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல்  நடந்தது. விஜயலட்சுமிக்காக முன்மொழிந்த பன்னீர், வழிமொழிந்த பாலாஜி ஆகியோர், விஜயலட்சுமியின் துணை தலைவருக்கான  வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது, நெடுங்குன்றம்  ஊராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பினர்களில், விஜயலட்சுமி சிறையில்  இருப்பதால், அவரை தவிர 14 வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில்  கலந்துகொண்டனர். இதில், 12 வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவு  தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Stories:

More
>