ரயில்வே துறை கட்டுமான பணிகளால் நீர்வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை: ரயில்வேக்கு நீர்வளத்துறை அறிவுரை

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் ஆற்றுப்படுகைகளை கடந்து தான் ரயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொள்ளிடம், காவேரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட பல ஆறுகளை கடந்து செல்கிறது. அதே போன்று நீர்நிலைகளின் அருகே மற்றும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் ரயில்வே பாதை செல்கிறது. இந்த மாதிரியான ரயில் பாதை செல்லும் வழித்தடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலங்களாலும், ரயில்வே பாதைகளாலும் ஆற்றின் மற்றும் நீர்நிலைகளின் நீரோட்டம் தடைபடாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கும் வகையில் நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில்  திட்டம் மற்றும் உருவாக்க பிரிவு தலைமை பொறியாளர் பொன்ராஜ், கட்டுமானம், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பொறியாளர் தனபால் மற்றும் ரயில்வே அதிகாரிககள், பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. இதில் நீர்வழித்தடங்களில் எந்தவித பாதிப்பை ஏற்படாத வகையில் தண்ணீர் செல்ல வசதியாக ரயில்வே துறையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும்.

ரயில்வே பாதைகள் அமைப்பதால் நீர்நிலைகள் பாதிக்காதவாறு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தற்போது, பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் வழிப்பாதைகளில் நீர் தேங்குவதை தடுக்கே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: