சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் வரும் 27ல் திறப்பு: நெடுஞ்சாலைத்துறை உயர்அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் வரும் 27ல் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கெண்டு வரப்படவிருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தாம்பரம், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், குன்றத்தூர், போரூர், பாடி உட்பட புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து

செல்கின்றன.

இந்த வாகனங்களால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.  இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் கட்ட கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்பணிளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதிலும், டெண்டர் பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் கடந்த 2015ல் தான் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது.

இப்பணிகளை 2018 ஜூன் 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பாலத்துக்கான சர்வீஸ் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிப்பதில் சிக்கல் இருந்தது. இதனால், அதிமுக ஆட்சி முடிந்த பிறகும் பாலப்பணி முடிந்தபாடில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இப்பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த 4 மாதங்களாக மேம்பால பணிகள் வேகமாக நடந்து வந்தது. தற்போது இப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதே போன்று வேளச்சேரி புறவழிச்சாலையில் கடந்த 2012 ஜூன் 29ம் தேதி ரூ.108 கோடி மதிப்பீட்டில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த பாலத்துக்கும் டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த 2015 டிசம்பர் 23ம்தேதி ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்கியது. இந்த பணி ஒப்பந்தப்படி கடந்த 2018 செப்டம்பர் 22ம்தேதிக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட தாமதத்தால் தற்போது வரை பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்தில் தற்போது வரை முதல் அடுக்கு பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் இரண்டாம் அடுக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளச்சேரி மேம்பாலத்தில் இரண்டாம் அடுக்கினையும், கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலத்தையும் வருகிற 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தற்போது மேம்பாலத்தில் இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: