ஆந்திராவில் ஆளும் கட்சியினர் தாக்குதல் விவகாரம் சந்திரபாபு 36 மணி நேர உண்ணாவிரதம் நிறைவு: அமித்ஷாவுடன் இன்று சந்திப்பு

திருமலை: ஆந்திராவில் ஆளும் கட்சியினர் தாக்குதலை கண்டித்து சந்திரபாபுவின் 36 மணிநேர உண்ணாவிரதம் நிைறவடைந்தது. தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்.ஆந்திராவில் போதை மருந்து, கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், இதற்கு முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு தான் காரணம் என்றும் தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பட்டாபிராம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒய்எஸ்ஆர் கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு சென்று பட்டாபிராமின் வீடு, கட்சி அலுவலகம் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதேபோன்று மாநிலம் முழுவதும் உள்ள தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நேற்றுமுன்தினம் காலை மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேச கட்சி தலைமை அலுவலகத்தில் 36 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினார். நேற்றிரவு 8 மணியளவில் அவரது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

உண்ணாவிரதத்தின்போது அவருடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று காலை சந்திரபாபு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அப்போது ஆந்திராவில் கஞ்சா விற்பனையின் அதீத வளர்ச்சி, இதனை கண்டுகொள்ளாத மாநில அரசு மற்றும் தட்டிக்கேட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளின் வீடு, கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டது உள்ளிட்டவை தொடர்பாக சில ஆதாரங்களை சமர்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: