தென் துருவம் வழியாக சென்று தாக்கும் வல்லமை கொண்டது அமெரிக்காவை மிரள வைக்கும் சீனாவின் புதிய வகை ஏவுகணை: கோதாவில் குதிக்கும் இந்தியா

வாஷிங்டன்: ‘நாட்டின் பாதுகாப்பு’ என்ற பெயரில் வளர்ந்த நாடுகள், உலகின் அழிவுக்கு வித்திட்டு வருகின்றன. கன நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும், அணுஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பல நாடுகள் ரகசியமாக உருவாக்கி சோதித்து வருகின்றன. சீனாவின் மிக வித்தியாசமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை குறித்து கேள்விப்பட்டு அமெரிக்காவே கதி கலங்கிப் போயுள்ளது. போதாக்குறைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ராக்கெட், ஏவுகணை என எதிரி நாடு ஏவும் எந்த ஆயுதமாக இருந்தாலும், அதை கண்ணிமைக்கும் நேரத்தில் தடுத்து வானிலேயே அழிக்கும் தடுப்பு தொழில்நுட்பங்கள் ஏராளம் வந்து விட்டன.

தற்போதைய நிலையில், தடுக்க முடியாத ஒரே அஸ்திரமாக இருப்பது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மட்டுமே. இது ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் பறந்து தாக்கக் கூடியது. கன நேரத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடியது. அணுசக்தியுடன் தாக்கக் கூடிய, தடுக்க முடியாத ஏவுகணை என்பதால் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மிகுந்த ஆபத்தானவைகளாக உள்ளன. தற்போது இந்த வகை ஏவுகணைகளை உருவாக்குவதில் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, சீனா வித்தியாசமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியிருப்பது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா தனது அணு சக்தி கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்துள்ளதாக இங்கிலாந்தின் தி பினான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ரகசியமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பூமியை குறுகிய அளவில் வட்டமிட்டு இலக்கை நோக்கி பயணித்துள்ளது. ஆனால், இந்த ஏவுகணை இலக்கை தகர்ப்பதில் வெற்றி அடையவில்லை என சில தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல்களை சீனா வழக்கம் போல் மறுத்துள்ளது. ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஏவும் வாகனத்தைதான் சோதித்ததாக கூறி உள்ளது. ஆனால், சீனாவின் சோதனை அமெரிக்க உளவுத்துறையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சீனா நடத்திய இந்த ரகசிய சோதனை மிகவும்  கவலைதரக் கூடியது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பேட்டியில் வெளிப்படையாகவே கூறி உள்ளார்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. வழக்கமாக பூமியின் வடதுருவம் வழியாகத்தான் ஏவுகணைகள் ஏவப்படும். இதை கணக்கிட்டுதான் அமெரிக்கா தனது அனைத்து ஆயுத தடுப்பு தொழில்நுட்பத்தையும் ரேடார்களையும் வடதுருவத்தை நோக்கி அமைத்துள்ளது. ஆனால், சீனா சோதித்துள்ள இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணை, அண்டார்டிகா கண்டம் அமைந்துள்ள தென் துருவம் வழியாக சென்று அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்டது. தென் துருவம் வழியாக சீனா சக்திவாய்ந்த ஏவுகணையை ஏவும் பட்சத்தில் அமெரிக்காவால் அதை தடுக்கவோ, தகர்க்கவோ நிச்சயம் சாத்தியமில்லை. அதனால்தான் சீனாவின் ரகசிய சோதனையை கேட்டு கதி கலங்கிப் போயுள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான். வடகொரியா ஆகியவை ஹைப்பர்சோனிக் ஆயுத தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.  இதனால், 3ம் உலகப் போர் என்று ஒன்று வந்தால், பூமியில் புல், பூண்டு கூட மிஞ்சாது என்பது மட்டும் நிச்சயம்.

பிரம்மோஸ் 2 2025ல் இலக்கு

இந்தியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் 2, ரஷ்யாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. மேக் 7 ஹைப்பர்சோனிக் வகையை சேர்ந்த இந்த ஏவுகணை 2017ல் இந்திய ராணுவத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டது. ஆனால், தாமதங்கள் காரணமாக தற்போது 2025 முதல் 2028க்குள் செயல்பாட்டில் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனைகள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

அமெரிக்கா கூட தடுக்க முடியாது

எதிரியின் எந்த ஏவுகணை வந்தாலும் அதை நடுவானிலேயே கண்டறிந்து தடுத்து அழிக்கும் தடுப்பு தொழில்நுட்பத்தில் அமெரிக்கா வலுவாக உள்ளது. ஆனாலும், அதிவேகம் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை கண்டறியும் கருவிகள் அமெரிக்காவிடம் இல்லை. உலகின் எந்த நாட்டிடம் இப்படிப்பட்ட கருவிகள் கிடையாது. அமெரிக்காவே 2030ல் தான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை தடுப்பு கருவிகளை கொண்டிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

* ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியவை.

* ஹைப்பர்சோனிக் ஆய்வுக்காக இந்த ஆண்டு ரூ.28,120 கோடி ஒதுக்கீடு செய்ய அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்கடன் அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தி உள்ளது.

* சீனா 200க்கும் மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணைகளை தயாரித்து வருவதாக செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் அமெரிக்கா கண்டறிந்துள்ளது.

Related Stories: