சூப்பர்-12 சுற்று இன்று ஆரம்பம் தென் ஆப்ரிக்காவுடன் ஆஸ்திரேலியா மோதல் : நடப்பு சாம்பியனுடன் இங்கிலாந்து பலப்பரீட்சை

துபாய்: அமீரகத்தில் நடைபெறும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் தகுதிச்சுற்று நேற்றுடன் முடிந்ததையடுத்து, பரபரப்பான சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது.கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ள 7வது டி20 உலக கோப்பை போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கிறது. பிசிசிஐ நடத்தும், இதன் தகுதிச்சுற்று  அக்.17ம் தேதி  தொடங்கியது. இதன் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து அணிகளும்,  பி பிரிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம்,  ஓமன், பப்புவா நியூ கினியா அணிகளும் மோதின.தகுதிச்சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், ஏ பிரிவில்  இருந்து  இலங்கை, அயர்லாந்து/நமீபியா அணிகளும்,  பி பிரிவில் இருந்து  ஸ்காட்லாந்து, வங்கதேசம் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றுக்கு ஏற்கனவே 8 அணிகள்  நேரடியாக தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சுற்றின் முதல் பிரிவில்  இங்கிலாந்து,  வங்கதேசம்,  ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ்,  இலங்கை அணிகளும், 2வது பிரிவில் பிரிவில் இந்தியா, நமீபியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இன்று மாலை  அபுதாபியில் நடக்கும் முதல் ஆட்டத்தில்  ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா, இரவு  துபாயில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் நாளை இரவு துபாயில் நடைபெற உள்ளது.

பரிசுத் தொகை

இந்த தொடரில் முதல் இடம் பிடித்து  கோப்பையை வெல்லும் அணிக்கு 12 கோடி வழங்கப்பட உள்ளது. 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ₹6 கோடி, அரையிறுதியுடன் வெளியேறும் 2 அணிகளுக்கு தலா 3 கோடி கிடைக்கும். இது தவிர சூப்பர்-12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ₹30 லட்சம் வழங்கப்படும். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை 37.5 கோடி.

Related Stories: