வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக நாளை முதல்வர் மு.கஸ்டாலின் வருவாய், நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 26ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவின் பேரில் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் மேற்கொண்டு

வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம், கொசஸ்தலையாறு மற்றும் கால்வாய்களில் தூர்வாருவது, ஆகாயத்தாமரை, குப்பை கழிவுகளை அகற்றுவது, கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 80 சதவீதம் வரை முடிந்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே கால்வாய்கள், ஆற்றுப்பகுதிகள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையும் வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்பது தொடர்பாக நீர்வளத்துறை சார்பில் உள்ளாட்சித் துறையிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையையொட்டி அணைகள் பாதுகாப்பு இயக்ககத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அணைகளுக்கு வரும் நீர் வரத்து, நீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஷிப்ட் அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாநிலம் முழுவதும் 90 அணைகள், 14098 ஏரிகளின் நீர் இருப்பு விவரங்களை சேகரித்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை முதல்வர் அலுவலகம் உட்பட 14 அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பெய்த மழையில் ஏரி, அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி, தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணை, ஏரிகள் ஓரிரு நாட்களிலேயே முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது. எனவே, கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு பல அணைகள் நிரம்பி வழியும் என்பதால் ஆற்றோரங்களில், ஏரி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஏரி, ஆற்றின் கரைகள் உடைந்தால் உடனுக்குடன் சரி செய்யும் வகையில் 1 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொறியாளர்களும் டிசம்பர் 31ம் தேதி வரை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 24ம் தேதி (நாளை) ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி வருவாய்த்துறை, நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகளை கேட்டறிகிறார். மேலும், பருவமழை முன்னேற்பாடுகள்  குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: