கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதாகவும், மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதாகவும் தெரியவந்ததையடுத்து, அவர்களை மீட்டு தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த மூன்று மீனவர்களில் சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய இரு மீனவர்கள் இலங்கையின் கடற்படை வசம் இருந்த நிலையில், மற்றொரு மீனவரான  ராஜ்கிரண் (28) இறந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல் வந்தது.இந்த சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>