மாநில மொழிகளை புறக்கணிக்கும் சிபிஎஸ்இ

* பல மாநிலங்கள் எதிர்ப்பு * தலைவர்கள் கண்டனம் * தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் கல்வி வாரியம்

சென்னை: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிபிஎஸ்இ கல்வி வாரியம் பல்வேறு  மாநிலங்களில் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் சார்பற்று  செயல்பட்ட வாரியம், தற்போது யாரிடமும் கருத்து கேட்காமலும், சுயசார்புடன்  செயல்படாமல் மொழிசார்பு உள்பட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, பல்வேறு  தரப்பினரின் கண்டனத்துக்கு ஆளாகி உள்ளது.  சிபிஎஸ்இ  தேர்வுக்கான அட்டவணையில் இந்தி மொழிக்கு மட்டும்  முக்கியத்துவம்  கொடுத்துவிட்டு,  மாநில மொழிகளை முக்கியத்துவம் இல்லாத பாடங்களாக மத்திய  கல்வி வாரியம் அறிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பல  அரசியல் தலைவர்கள் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்  தெரிவித்துள்ளனர். இந்த கண்டனங்களை அடுத்து சிபிஎஸ்இ தனது விளக்கத்தை நேற்று வெளியிட்டது.

 சிபிஎஸ்இ  என்னும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும்  பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கான,  பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி முதற்கட்ட தேர்வு  நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ளது. இதையடுத்து, முதற்கட்ட தேர்வுக்கான அட்டவணையை, டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ  தலைமை அலுவலகம் 18ம் தேதி  வெளியிட்டது. இதன்படி, 10ம் வகுப்பு தேர்வு  நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 11ம் தேதி வரையும்,  12ம் வகுப்பு  தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரையும் நடக்கும் என்று  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.   சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தேர்வு அட்டவணையில்  முதன்மைப் பாடங்களுக்கான தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைப் பாடங்களின் வரிசையை பொறுத்தவரையில் 10ம்  வகுப்பு பாடங்களாக சமூக அறிவியல், அறிவியல், மனையியல், கணக்கு, அடிப்படை  கணக்கு, கணினி பயன்பாடு, இந்தி மொழிபாடங்கள், ஆங்கிலம் ஆகிய பாடங்களும்,  12ம் வகுப்பு பாடங்களில் முதன்மைப் பாடங்களாக சமூகவியல், ஆங்கிலம் கணக்கு,  உடற்கல்வி, வணிகக் கல்வி, புவியியல், இயற்பியல், உளவியல், கணக்குப்  பதிவியல், வேதியியல், பொருளியல், இந்தி மொழி விருப்ப பாடம், இந்தி  முதன்மைப் பாடம், அரசியல் அறிவியல், உயிரியல் போன்ற பாடங்களுக்கு தேர்வு  நடக்கும் என்று அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், மேற்கண்ட  முதன்மைப் பாடங்கள் தவிர, முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கான தேர்வு  அட்டவணை தனியாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும்,  இந்த பாடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்கும் என்றும்  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

 முதன்மைப் பாடங்கள் வரிசையில் இந்தி மொழி,  ஆங்கில மொழியை சேர்த்துவிட்டு, தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட மாநிலங்களின் மொழிகளை முக்கியத்துவம் இல்லாத  பாடங்களின் பட்டியலில் சிபிஎஸ்இ வைத்துள்ளதற்கு அந்தந்த மாநில அரசியல்  தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது முதன்மை பாடத் தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியமே நேரடியாக விடைத்தாள்களை திருத்தும். முக்கியத்துவம் இல்லாத பாடங்களை திருத்தும் பொறுப்பு அந்தந்த பள்ளி நிர்வாகத்திடமே சிபிஎஸ்இ அளித்துள்ளது.இது நியாயமல்ல என்று பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ துவங்கிய பிறகு தற்போதுதான் முதன்முதலாக,  பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சி.பி.எஸ்.இ முயல்கிறது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவர்கள் விரும்பிப் படிக்காத நிலை உருவாகி விடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் தான்.

 இந்நிலையில்,  பஞ்சாபி மொழியை முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் பட்டியலில் வைத்துவிட்டதாக  சிபிஎஸ்இ க்கு கடும் கண்டனத்தை பஞ்சாப் முதல்வர் சந்திரஜித்சிங் சன்னி  தெரிவித்துள்ளதுடன், பஞ்சாபி மொழியை முக்கிய பாடங்கள் வரிசையில் வைக்க  வேண்டும் என்றும், இச் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, பஞ்சாப்  இளைஞர்கள் தங்கள் தாய் மொழியை கற்பதை தடுக்கும் செயல் என்று தனது  டிவிட்டரில் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வரின் கண்டனத்தை தொடர்ந்து பிற மாநிலங்களில் இருந்தும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு கண்டனங்கள் வரத் தொடங்கியுள்ளன.  தமிழகத்தை  பொறுத்தவரையில், சொமோட்டோ நிறுவனத்தில் உணவு வேண்டி ஆர்டர் கொடுத்த  நபருக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் ஊழியர்கள்  பதில் அளித்ததால் தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதனால் அந்த  நிறுவனத்துக்கு அதன் பல லட்சம் வாடிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்ததுடன்  அந்த நிறுவனத்தின் செயலியையும் தங்கள் செல்போனில்  இருந்து நீக்கிவிட்டனர்.  இந்த சர்ச்சைக்கு பிறகு அந்த நிறுவனத்தின் பங்குகளும் பெரும் அளவில் சரிவை  சந்தித்தன.

இந்த பரபரப்புக்கு இடையே தான், சிபிஎஸ்இ கல்வி வாரியமும்  மாநில மொழிகளை புறக்கணித்து இந்தி  மொழியை மட்டும் தேர்வு அட்டவணையில் இடம்  பெற வைத்துள்ளது. இதற்கும் தற்போது பெரும் கண்டனங்கள் குவியத்  தொடங்கியுள்ளது.  இந்த கண்டனங்களை அடுத்து, ‘‘சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள  முதற்பருவத் தேர்வு அட்டவணையில் நிர்வாக வசதிக்காகத் தான் அந்த பாடங்கள்  பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எந்த எண்ணிக்கையில் அந்த பாடங்களை மாணவர்கள்  தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர் என்பதை வைத்து தான் அப்படி  பிரிக்கப்பட்டது. இது  தவிர முதன்மைப்பாடம், முக்கியத்துவம் அல்லாத பாடம்  என்று பிரிப்பதற்கு வேறு எண்ணம் இல்லை. ஒவ்வொரு பாடமும் கல்வி கற்பிக்கும்  நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை  தான். அதைப் போலத்தான் பஞ்சாபி  மொழியும்  மாநில மொழியில் வைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காகவும்,  தேர்வை எளிதில் நடத்த வசதியாக,  அனைத்து மாநில மொழிகளும் முக்கியத்துவம்  இல்லாத பாடங்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது ’’ என்று சிபிஎஸ்இ  அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  இருப்பினும், மாநில மொழிகளை  பறக்கணித்து, இந்தி மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளிப்பதாக அரசியல்  தலைவர்கள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிபிஎஸ்இ-யின்  நடவடிக்கையால் தமிழக மக்களும் முகநூல்கள், டிவிட்டர்கள், வாட்ஸ் ஆப்களின்  மூலம் தங்களின் கண்டனங்களை சிபிஎஸ்இக்கு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: