தமிழகத்தில் 6வது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்.! சென்னையில் 1,600 மையங்களில் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் 6வது கட்டமாக நாளை 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில் சென்னையில் 1,600 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இதுவரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி நடைபெறவிருந்த 6வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை இம்முகாம் நடக்கிறது.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட அதிகமாக 50 ஆயிரம் இடங்களில் 6வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதேபோல் சென்னையிலும் தீவிரமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியன்று சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,35,865 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். சென்னையில் 20ம் தேதி வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 71,19,870 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் மீண்டும் 23ம் தேதி 1600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 6வது தீவிர தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

Related Stories: