கொத்தடிமையாக வேலை பார்த்த 25 சிறுவர்கள் விருதுநகரில் மீட்பு: சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு

விருதுநகர்: விருதுநகர் அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் வடமாநிலங்களை சேர்ந்த 25 சிறுவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தலித் பவுண்டேஷன் அமைப்பிற்கு தகவல் சென்றுள்ளது. அங்கிருந்து அளித்த தகவலின்படி, விருதுநகர் மாவட்ட தலித் பவுண்டேஷன் அமைப்பினர் நேற்று அந்த மில்லுக்கு சென்றனர். ஆனால் அவர்களை, நிறுவனத்திற்கு நுழைய அனுமதிக்கவில்லை. இதையடுத்து அமைப்பின் நிர்வாகி கந்தசாமி திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருக்கு மனு அளித்தார். அதில், ‘‘தனியார் மில்லில் பணியாற்றும் சட்டீஸ்கர் மாநில பட்டியல் இனத்தை சார்ந்த 25 தொழிலாளர்களை அதிகப்படியான வேலை வாங்கி, குறைவான ஊதியம் வழங்கி உள்ளனர்.

முறையற்ற குடியிருப்பில் தங்க வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில தலித் அமைப்பின் தன்னார்வலர் தேவேந்திரபகில் அனுப்பிய ஆதாரத்தின் அடிப்படையில் மனு அளிக்கிறோம். வடமாநில தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கான நீதியும், நிவாரணமும் வழங்க வேண்டும். நிறுவனத்தின் மீது வன்கொடுமை சட்டப்பிரிவு, கொத்தடிமை ஒழிப்பு சட்டம், மனித கடத்தல் சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். இதையறிந்த தனியார் நிறுவனம் நேற்றிரவு, 25 சிறுவர்களையும் விருதுநகர் ரயில் நிலையத்தில் கொண்டு விட்டுச் சென்றது. ஊர் திரும்ப வழியின்றி 25 பேரும் தவித்தனர். தகவலறிந்த கந்தசாமி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் நாராயணசாமி, டிஎஸ்பி அர்ச்சனா, தாசில்தார் செந்தில்வேல் ஆகியோர் நேரில் வந்து விசாரித்தனர். தொடர்ந்து அவர்களுக்கான உணவு, குடிநீர் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Related Stories: