துபாய், இலங்கையிலிருந்து 2 விமானங்களில் கடத்தி வந்த 5 கிலோ தங்கம், 15 ஐபோன்கள் 12 லேப்டாப் பறிமுதல்.! 10 பேர் கைது

மீனம்பாக்கம்: துபாய் மற்றும் இலங்கையில் இருந்து சென்னை வந்த 2 சிறப்பு விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.2.68 கோடி மதிப்புடைய 5.06 கிலோ தங்கம், 15 ஐபோன்கள், 12 பழைய லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை விமான நிலைய சுங்க துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.

துபாயில் இருந்து நேற்றிரவு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் அடுத்தடுத்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னை, சிவகங்கை, புதுக்கோட்டையை சேர்ந்த 10 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

அவர்கள் வைத்திருந்த பழைய லேப்டாப்களை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அந்த லேப்டாக்களுக்கு அடியில் தங்க பசைகளை மறைத்து வைத்திருந்தனர். அதோடு சிலர், தங்களுடைய உள்ளாடைகளுக்குள்ளும் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தனர். சிலர் தங்களது சூட்கேஸ்களுக்குள் ஐபோன்களை மறைத்து வைத்திருந்தனர். மொத்தம் 5.06 கிலோ தங்கம், 15 ஐபோன்கள், 12 பழைய லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவைகளின் சர்வதேச மதிப்பு ரூ.2.68 கோடி. இதையடுத்து சுங்கத்துறையினர் 10 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: