பாகிஸ்தான் அணிக்கு கே.எல்.ராகுல்தான் மிகப்பெரும் அச்சுறுத்தல்: மேத்யூ ஹெய்டன் பேட்டி

துபாய்: உலக கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இப்போதே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. உலக கோப்பை தொடர்களில் இந்தியாவை பாகிஸ்தான் இதுவரை வென்ற வரலாறு கிடையாது. ஆனால் இந்த முறை அதனை மாற்ற பாகிஸ்தான் அணி தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் பேட்டிங்  ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் அளித்த பேட்டி: இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் தான் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்.

அவரை விரைவாக வெளியேற்றி விட்டால் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கலாம். கே.எல்.ராகுலின் ஆட்டத்தை அவரின் ஆரம்பக் காலக்கட்டம் முதலே நான் பார்த்து வருகிறேன். அவரின் அதிரடி எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். இதேபோல ரிஷப் பன்ட் போன்ற ஆக்ரோஷ பேட்டிங்கை இயற்கையாகவே கொண்ட வீரரையும் நான் நன்கு அறிவேன். அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால் பந்துவீச்சை துவம்சம் செய்துவிடுவார். அவரின் நோக்கமும் அதுதான். இவை அனைத்தையும் விட இந்திய அணியின் ஆலோகராக டோனி இருக்கிறார். அவர் ஆலோசகராக செயல்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது’’ என்றார்.

Related Stories: