பதவியேற்பு விழா மேடையிலேயே கஞ்சா வழக்கில் கைதான பெண்...இன்று ஊராட்சி துணைத் தலைவரானார்!!

சென்னை : தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவியேற்பு மேடையிலேயே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடியின் மனைவி விஜயலக்ஷ்மி சிறையில் இருந்த நிலையில் துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றவர் விஜயலக்ஷ்மி. இவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி ஆவார்.

சூர்யா மீது 50க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை எதிர்த்து யாரும் நிற்கக் கூடாது என சிறையிலிருந்தபடியே ரவுடி சூர்யா மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சூர்யாவின் மனைவி விஜயலட்சுமியை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற விஜயலக்ஷ்மி நேற்று பதவியேற்க வந்த போது அவரை பதவியேற்பு விழா மேடையில் வைத்தே காவல்துறையினர் கஞ்சா வழக்கில் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. விஜயலக்ஷ்மியின் வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு விஜயலட்சுமியைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் சிறையில் இருக்கும் அவர் துணை தலைவராக வெற்றி பெற்றார்.

Related Stories: