திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி

திருவாரூர் : திருவாரூர் ரயில்வே மேம்பாலம் அருகே ரூ.25 லட்சம் மதிப்பில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூரில் இருந்து வந்த பேருந்து நிலையமானது கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நிலையில் அப்போது இருந்து வந்த மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் பேருந்துகள் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டதால் இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் இருந்து வந்தது.

எனவே நகரில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று கடந்த தி.மு.க ஆட்சி காலத்தின் போது 2010ம் ஆண்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் நகராட்சி 30வது வார்டுக்குட்பட்ட தியாகபெருமாநல்லூர் பகுதியில் 18 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்காக ரூ.6 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் 2011ல் ஆட்சி மாற்றம் காரணமாக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பின்னர் பணிகள் துவங்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் வரையில் நடைப்பெற்ற நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ந்தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி மூலம் விடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகை மற்றும் திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் பைபாஸ் ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று வருவதால் இந்த இடத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் முதியவர்கள், மற்றும் கைக்குழந்தையுடன் கூடிய பெண்கள் உட்பட அனைவரும் உரிய இட வசதியின்றி இருந்து வருகிறது.

எனவே இந்த இடத்தில் இருபுறமும் பேருந்து நிழற்குடை அமைத்திட வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில்வே மேம்பாலம் அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று அமைக்கும் பணி நகராட்சி சார்பில் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமான எம்எல்ஏ பூண்டிகலைவாணன் மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>