மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் எடப்பாடியின் நண்பர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு.! அலுவலகம் உள்ளிட்ட 27 இடங்களில் விஜிலென்ஸ் அதிரடி

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பரான இளங்கோவனின் சேலம், சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர் வீடு, அலுவலகம், கல்லூரிகள் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் அவர், வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது குறித்தும், பணம் மதிப்பிழப்பு நேரத்தில் பணம் மாற்றப்பட்டது குறித்து முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் அதிகளவில் ஊழலில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தது. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆதாரங்களை திரட்டி அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், கேசி வீரமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பராக வலம் வந்த சேலத்தை சேர்ந்த இளங்கோவன் வீட்டில் இன்று அதிகாலை முதல் ரெய்டு நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். அதிமுகவில் ஜெயலலிதா பேரவை சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது இளங்கோவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அதிகளவில் புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவன், அவரது மகன் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், கடந்த 2014 முதல் 2020 வரை 6 ஆண்டுகளில் வருமானத்தைவிட 131%, அதாவது ரூ.3.78 கோடி சொத்து சேர்த்து இருப்பது முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவனின் வீடு, தோட்டம், அலுவலகம், நண்பர்கள் வீடுகள், கல்வி நிறுவனங்கள் என 27 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டில் டிஎஸ்பி மதியழகன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சேலம் வந்த அவர்கள், தனித்தனி குழுவாக பிரிந்து ஒரே நேரத்தில், பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீடு, ஆத்தூரில் உள்ள தோட்டம், சகோதரி வீடு, அவரது நண்பரும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணை தலைவருமான குபேந்திரன், அதிமுக நிர்வாகி ராஜராஜ சோழன் ஆகியோர் வீடுகள், கடைகள் உள்ளிட்ட 19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை கோடம்பாக்கத்தில் நண்பர் ராஜ் நாராயணன், பிர்மிங்கம் இன்டஸ்ட்ரீஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள கல்லூரி, பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. கள்ளக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இளங்கோவனின் நண்பர்கள் வீடு, கல்வி நிறுவனங்கள் உள்பட மொத்தம் 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை மற்றும் விசாரணையில் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பான முக்கிய ஆவணங்களை விஜிலென்ஸ் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அனைத்து இடங்களிலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆத்தூரில் உள்ள இளங்கோவன் ஆதரவாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.

சர்ச்சைகளில் சிக்கியவர்

கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மாற்ற முடியாமல் அதிமுக விஐபிக்கள் பலர் அப்போது தவித்தனர். அவர்களுக்கு சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிமூலம் போலிக்கணக்குகள் தொடங்கி பரிமாற்றம் செய்து கொடுத்தார் என்று பரபரப்பு புகார் கிளம்பியது. இது தொடர்பாக இளங்கோவனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தேர்தல் நேரத்தில் ரூ.2ஆயிரம் வழங்க டோக்கன் விநியோகம் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் மதிப்பிழப்பு நேரத்தில் பணம் மாற்றப்பட்டது குறித்தும் தற்போதைய ரெய்டில் விசாரணை நடந்துள்ளது.  அது தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>