தாளவாடி மலைப்பகுதியில் கனமழை விளைநிலங்கள் மழை நீர் வெள்ளத்தில் மூழ்கியது

சத்தியமங்கலம் :  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில நாட்களாக தாளவாடி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை தாளவாடி அருகே உள்ள கல்மண்டிபுரம், எரகனஹள்ளி, தொட்டமுதுகரை, திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பள்ளங்கள் மற்றும் சிறு ஓடைகளில் செந்நிற மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ச்சியாக 2 மணி நேரம் கனமழை பெய்ததால் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்ட பயிர்கள் விளை நிலத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கின.

இதன் காரணமாக பயிர்கள் மழை நீரில் அழுகி சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ஆங்காங்கே தார் சாலைகளில் உள்ள தரைப்பாலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்டாபுரம் அருகே வனப்பகுதியில் உள்ள ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியிலுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. இதன் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையின் காரணமாக தாளவாடி மலைப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் பள்ளங்கள் வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சிக்கோலா அணை மற்றும் சுவர்ணவதி அணைக்கு சென்று சேருகிறது. தமிழகப் பகுதியில் பெய்யும் மழைநீர் கர்நாடக மாநிலத்திற்கு சென்று சேர்வதால் தாளவாடி மலைப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி மழை நீரை தேக்கி நிலத்தடிநீர் மட்டத்தை  உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>