உயிருக்கு போராடும் ஆசிரியருக்காக பள்ளி மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை

பரமக்குடி : உயிருக்கு போராடும் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்த சம்பவம், பரமக்குடி பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (32). திருமணமாகி 4 வயது ஆண் குழந்தை உள்ளது. பரமக்குடி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், ஒரு மாதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தினமும் டயாலிசிஸ் செய்யப்படுகிறது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரின் பெற்றோர் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

ராஜசேகரின் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருடைய தந்தையும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ராஜசேகர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப்படுவதால், அரசு உதவி வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த அக். 11ல் செய்தி வெளியானது. இந்நிலையில், உயிருக்காக போராடும் ராஜசேகர் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் நேற்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

ஆசிரியர் ராஜசேகர் குணமடைய மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். இரு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடும் ஆசிரியருக்காக மாணவர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: