திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு-கோயிலை வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை :  உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாயும் குருமலையாறு, கொட்டையாறு, பாரப்பட்டியாறு, உப்புமண்ணப்பட்டியாறு, கிழவிப்பட்டியாறு உள்ளிட்ட காட்டாறுகள் ஒன்றிணைந்து பஞ்சலிங்க அருவியாக விழுந்து பாலாறாகப் பாய்ந்து திருமூர்த்தி அணையில் கலக்கிறது.

மலைப்பகுதியிலுள்ள மூலிகைச்செடிகளை வருடி வரும் காட்டாற்று நீரில் குளிப்பது பல்வேறு நன்மைகளை தரும் என்பதால் பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனைவரும் ஆர்வம் காட்டுவரர்கள். கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்துக்கு பிறகு பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வது தொடர்கதையாகவே உள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளம் அடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலையும் சூழ்ந்தது. இங்குள்ள கன்னிமார் சிலைகளை மூழ்கடித்த வெள்ளம் பிள்ளையார் சன்னதி வரை பொங்கி ஓடியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

உண்டியல்கள் பாலிதீன் கவர்களால் மூடி கட்டப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து பெய்த கனமழையால் பாலாற்றின் மீது பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்காக கட்டப்பட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் பஞ்சலிங்க அருவிக்கான பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டது.

கனமழையால் சாலை துண்டிப்பு

உடுமலை பகுதியில் பெய்த மழையால் செக்டேம் நிரம்பி, உபரிநீர் உடுக்கம்பாளையம், கொடுங்கியம், எரிசனம்பட்டி, தேவனூர்புதூர், நவக்காளி ஆறு வழியாக பாய்ந்தோடியது.இதன் காரணமாக, உடுமலை-ஆனைமலை சாலையில் பெரிய பாப்பனூத்து பிரிவில் இருந்து பாப்பனூத்து கிராமத்துக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் விளாமரத்துபட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், பூளநாயக்கன்பட்டி, கெடிமேடு ஆகிய கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தென்னை மில்கள் அதிகம் உள்ளன. சாலை துண்டிப்பால் மில்களுக்கு கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகனங்களில் மட்டும் செல்ல முடிகிறது. அதுவும், எந்த நேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் உள்ளது.

காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை சாலையின் ஓரம் நின்று கிராம மக்கள் வேடிக்கை பார்த்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தளவுக்கு கனமழை பெய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

More
>