ராணிப்பேட்டையில் வீரவணக்க நாள் நிகழ்ச்சி வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை போற்ற வேண்டும்-அஞ்சலி செலுத்தி எஸ்பி பேச்சு

ராணிப்பேட்டை :  பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை போற்ற வேண்டும் என ராணிப்பேட்டையில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் எஸ்பி தீபா சத்யன் தெரிவித்தார்.பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. எஸ்பி தீபா சத்யன் தலைமை தாங்கினார்.

அப்போது, வீர மரணமடைந்த காவலர்களின் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி எஸ்பி பேசுகையில், ‘கடந்த 1952ம் ஆண்டு இதே நாளில்  லடாக் பகுதியில் ஆட்ஸ் ஸ்பிரிங்ஸ் எனப்படும் இடத்தில் சீன ராணுவத்தினர்  ஒளிந்திருந்து இந்திய வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நமது சிஆர்பிஎப் படையை சேர்ந்த  10 வீரர்கள் வீர மரணமடைந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி  உயரத்தில் நடந்த இந்த தாக்குதலில் நடந்த அவர்களது தியாகத்தை நினைவு கூறுகிறோம்.

இதேபோல், பணியின்போது இறந்த ஒவ்வொரு காவலர்களின் தியாகத்தையும் நாம் போற்ற வேண்டும்’ என்றார். இதில், டிஎஸ்பிக்கள் பிரபு (ராணிப்பேட்டை), புகழேந்தி கணேசன் (அரக்கோணம்), பயிற்சி டிஎஸ்பி தனு, இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, 62 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ராணிப்பேட்டையில் பணியின்போது வீரமரணமடைந்த காவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

60 குண்டுகள் முழங்க அஞ்சலி

ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலைய இன்ஸ்பெக்டரும், ஆயுதப்படை காவலர் பயிற்சியாளருமான முகேஷ்குமார், திருவாரூர் மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வீரமரணம் அடைந்த தனது தந்தை தங்கராஜ் மறைவுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு 60 குண்டுகள் முழங்க எஸ்பி தீபா சத்யன் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: