கொல்லிமலை மலைப்பாதையில் 51வது கொண்டை ஊசி வளைவில் தலைகுப்புற கவிழ்ந்த டிப்பர் லாரி-டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்

சேந்தமங்கலம் : கொல்லிமலை மலைப்பாதையின் 51வது கொண்டைஊசி வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.சேந்தமங்கலம் அடுத்த வடுகப்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரியில் இருந்து டிப்பர் லாரியில் நேற்று ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு மலைப்வேப்பகுட்டையை சேர்ந்த டிரைவர் சரவணன், கொல்லிமலை தேவனூர்நாடு செட்டுப்பட்டி பகுதியில் நடைபெறும் சாலை பணிக்கு கொண்டுசென்றார். ஜல்லிக்கற்களை இறக்கிவிட்டு மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சோளக்காடு பகுதியில் கோயிலுக்கு சென்ற  டிரைவர் சரவணின் உறவினர்களான ராஜா (35), தியாகராஜன் (39), தாங்களும் சேந்தமங்கலம் வருவதாக கூறி டிப்பர் லாரியில் ஏறிக்கொண்டனர்.டிப்பர் லாரி மலைப்பகுதியில் உள்ள இறங்கியபோது 51வது கொண்டை ஊசி வளைவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, நேராக பாய்ந்து சென்று 49வது கொண்டை ஊசி வளையில் 50 அடி பள்ளத்தில் தலைகுப்புற கீழே கவிழ்ந்து விழுந்தது. இதில் டிரைவர் சரவணன் மற்றும் லாரியில் லிப்ட் கேட்டு வந்த 2 பேர் என 3 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: