15 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாததால் நெல்லை சந்திப்பில் புதர்மண்டிக் கிடக்கும் அறநிலையத்துறை இடம்-வருவாய் ஈட்டும் கட்டிடம் கட்ட நடவடிக்கை

நெல்லை :  நெல்லை சந்திப்பு மையப்பகுதியில் திரையரங்காகச் செயல்பட்ட அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாததால் செடி, மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இப்பகுதியைச் சீரமைத்து வருவாய் ஈட்டும் கட்டிடம் கட்ட அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. திமுக ஆட்சி மலர்ந்த பிறகு அறநிலையத்துறையில் மக்கள் போற்றும்வகையில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் ஒரு நடவடிக்கையாக அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள், கட்டிடங்களை மீட்பது, அந்த இடங்களில் ஓதுவார் பாடசாலை, கல்லூரிகள், முதியோர் இல்லம் போன்றவை அமைப்பது மற்றும் வருவாய் ஈட்டும் வகையில் கட்டிடம் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் நெல்லை மாநகரின் இதயமான சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் மைய கீழ்பகுதியில் ரயில்வே கிராசிங் அருகே பூம்புகார் எதிரே அறநிலையத்துறைக்கு சொந்தமான 44 சென்ட் இடம் முன்னர் பழமையான திரையரங்காகச் செயல்பட்டது. வழக்குகளுக்கு பின்னர் திரையரங்கு இருந்த இடம் கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னரே அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்ததாகக் கூறப்படுகிறது. திரையரங்கும் பல ஆண்டுகளாக செயல்படவில்லை.

இவ்வாறு 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தாததால் இங்கு மரங்கள், செடி கொடிகள் வளர்ந்து திரையரங்கு கட்டிடம் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு காடு போல் புதர் மண்டிக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. மேலும் விஷ ஜந்துக்களும் நடமாட்டத்திற்கும் இங்கு குறையில்லை. இந்நிலையில் புதர் மண்டிக்கிடக்கும் இவ்வளாகத்தை அறநிலையத்துறை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஏதாவது கட்டிடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் மேற்கு பகுதி வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜானகிராம் அந்தோனி கூறுகையில் ‘‘அறநிலையத்துறைக்கு சொந்த இடமான இப்பகுதி மாநகரின் முக்கிய மையத்தில் உள்ளது. இதன் நில மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். இந்த இடம் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இப்பகுதியை மாநகர மக்கள் பயன்படுத்தும் வகையில் நூலகம், திருமண அரங்கம், வணிகவளாகம் போன்ற ஏதாவது ஒன்றை அறநிலையத்துறை அமைக்கவேண்டும். இங்கு பாலத்தின் கீழ் வாகனங்களை நிறுத்த அதிக இடவசதி உள்ளது. இதன் மூலம் அந்த துறைக்கும் வருவாய்கிடைக்கும்.

இதுகுறித்து தமிழக முதலமைச்சர், அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளேன். உறுதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்’’ என்றார். இதுகுறித்து அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறுகையில் ‘‘கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து விட்டது. ஆயினும் கட்டத்தின் ஸ்திரதன்மை குறித்த அறிக்கை தருமாறு பொதுப்பணித்துறையிடம் கோரப்பட்டது. அவர்கள் நேற்று வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்கள் தரும் அதிகாரப்பூர்வ அறிக்கைக்கு பின்னர் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் ஒப்புதலுடன் இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் பயனுள்ள கட்டிடம் கட்ட உயர் அதிகாரிகள் ஒப்புதலுக்கு ஏற்பாடு செய்யப்படும்’’ என்றனர்.

Related Stories:

More
>