அணைக்கட்டு அருகே மண் அரிப்பால் சாலை துண்டிப்பு-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு : அணைக்கட்டு ஒன்றியம், கெங்கநல்லூர் அருகே சின்ன அணைக்கட்டு, இருளர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்வதற்காக ஏரி நீர் செல்லும் கால்வாயின் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இணைப்பு சாலை அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.  அவ்வாறு அமைக்கப்பட்ட இணைப்பு சாலை, சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், தற்போது பெய்து வரும் கனமழையால், கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் நடுவே உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இணைப்பு சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வேறு பகுதி வழியாக பல கிலோ மீட்டர் சுற்றிச்செல்வதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து பிடிஓ சுதாகரன் கூறுகையில், அங்கு தற்காலிக நடவடிக்கை எடுக்க ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விரைவில் இணைப்பு சாலை சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Related Stories: