பள்ளிகொண்டா அருகே போலீசார் அதிரடி சூதாட்ட கிளப் நடத்திய சகோதரர்கள் உட்பட 12 பேர் கைது-₹71 ஆயிரம், 10 பைக்குகள், செல்போன் பறிமுதல்

பள்ளிகொண்டா :   பள்ளிகொண்டா அடுத்த ஊனைப்பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகன்கள் குமரேசன்(55), பரதன்(45). இவர்கள் இருவரும் கந்தனேரி- ஊனைப்பள்ளத்தூர் ரோட்டில் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர். மேலும், அதன் அருகே கடந்த 10 வருடத்திற்கு முன்பு கொட்டகை அமைத்து, மனமகிழ் சங்கம் என அனுமதி பெற்று நடத்தி வந்தனர். அதில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிங்காரம், நந்தகோபால், சிறப்பு போலீசார் கோழிப்பண்ணை மற்றும் அதனை ஒட்டியுள்ள கொட்டகையை சுற்றி வளைத்தனர்.   அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும், பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், குடியாத்தத்தை சேர்ந்த கணேஷ்(47), நேதாஜி(40), முத்துக்குமரன்(50), பள்ளிகொண்டாவை சேர்ந்த ஜமாலுதீன்(47), கந்தனேரி பகுதியை சேர்ந்த கோபி(38), விஜியரங்கம்(49), சிங்கல்பாடி கிராமத்தை சேர்ந்த செல்வமுருகன்(42), மேல் வைத்தியனாங்குப்பத்தை சேர்ந்த முனியாண்டி(63), சின்ன தோட்டாளத்தை சேர்ந்த வினோத்குமார்(42), வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த சரவணன்(38) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 10 பேர் உட்பட கிளப் நடத்தி வந்த குமரேசன் மற்றும் பரதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், ₹71,170, 11 செல்போன்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மது விருந்துடன் இரவு வரை தொடரும் சூதாட்டம்

சூதாட்டத்தில் அதிக பணம் கொழிக்கும் ஆட்டம் உள்ளே வெளியே என்ற ஆட்டம் தான். இந்த ஆட்டத்தில் ₹5க்கு ₹50 எனவும், ₹50க்கு ₹500 என்றும், ₹500க்கு ₹5000 எனவும் பத்து மடங்கு பணம் உடனடியாக கிடைப்பதால் இந்த ஆட்டத்தில் பங்கு பெற உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து குவிகின்றனர். மேலும், விளையாடும் இடத்திலேயே 1 மணி நேரத்திற்கு வீதம் வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆட்களும் உண்டு.

இதனால், பணம் இல்லாதவர்களும் கூட வந்து வட்டிக்கு வாங்கி ஆடும் நிலைமை உள்ளது. தொடர்ந்து காலை 6 மணி முதல் தொடங்கும்  சூதாட்டத்திற்கு காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு மற்றும் மது விருந்து, சிகரெட், குட்கா பொருட்கள் என அனைத்தும் சப்ளை செய்வதற்காக தனித்தனி ஆட்களை கொண்டு நடத்தி வந்தது போலீசார் நேற்று முன்தினம் இரவு 7 மணிமுதல் விடிய விடிய நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: