ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் நிலத்தில் புகுந்தது 10 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்-குடியாத்தம் அருகே விவசாயிகள் வேதனை

குடியாத்தம் : குடியாத்தம் அருகே ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் நிலத்தில் நீர் புகுந்து 10 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி சேதமானது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராம ஏரி கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும், நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாகவும் நிரம்பியது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் பெரும்பாடி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், பெரும்பாடி ஏரி உபரிநீர் செல்லும் மூங்கப்பட்டான்பட்டி, ஸ்டாலின் நகர் பகுதியில் உள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பாலும், மண்ணால் மூடப்பட்டுள்ளதாலும் கால்வாய் இருந்ததற்கான இடமே தெரியாத வகையில் உள்ளது. இதனால், ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் கால்வாய் அருகே உள்ள விவாசாய நிலங்களில் புகுந்தது.

இதில், மூங்கப்பட்டான்பட்டியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்காக காத்திருந்த 10 ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் மூழ்கியது. மேலும், ஏற்றுமதிக்காக சேகரித்து வைக்கப்பட்டு இருந்து தேங்காய் குவியல்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்து, மூங்கப்பட்டான்பட்டி விவசாயிகள் கூறுகையில், `பல லட்சம் கடன் வாங்கி நெற்பயிர் அறுவடை செய்தோம்.

நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு நெற்பயிர்கள் காத்திருந்த நிலையில் பெரும்பாடி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாலும், மண்ணால் மூடப்பட்டுள்ளதாலும் நிலங்களுக்கு தண்ணீர் புகுந்து சேதமடைந்துள்ளது. இதனால் ெபரும் நஷ்டமடைந்துள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

ஆபத்தான மின்கம்பம்

பெரும்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணறு ஒன்றின் அருகே மின்கம்பம் அமைந்துள்ளது. இந்நிலையில், பெரும்பாடி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் செல்ல முடியாமல் நிலத்திற்குள் புகுந்த நிலையில் கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டு பழுதடைந்துள்ளது. மேலும், கிணற்றையொட்டியுள்ள மின்கம்பமும் சேதமடைந்து  சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: