தாமிரபரணியில் வெள்ளம் குறைந்தது பாபநாசத்தில் மக்கள் உற்சாக குளியல்

வி.கே.புரம் : தாமிரபரணியில் வெள்ளம் குறைந்ததால் பாபநாசத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை கொட்டித் தீர்த்த மழையால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை குறைந்த நிலையில், நேற்று ஆற்றில் வெள்ளம் குறைந்தது. இதையடுத்து பாபநாசம் தாமிரபரணி படித்துறையில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இதனிடையே 3  நாள் இடைவெளிக்கு பிறகு நேற்று முன்தினம் மாலை முதல் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி  நிலவரப்படி சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 89.4 மிமீ மழை பதிவாகி உள்ளது.  மூலைக்கரைப்பட்டியில் 64 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்  மழை காரணமாக பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1198  கனஅடி நீர் வந்து  கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1666 கனஅடி நீர்  வெளியேற்றப்படுகிறது.  பாபநாசம் அணை பகுதியில் 2 மிமீ மழை  பதிவாகி உள்ளது. சேர்வலாறு  அணை நீரிருப்பு 143.70 அடியாக உள்ளது. மணிமுத்தாறு  அணை 78  அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு 16.65, நம்பியாறு  10.36, கொடுமுடியாறு  50.50, கடனா அணை 82.20, ராமநதி 73.23,  கருப்பாநதி 65.95, குண்டாறு 36.10, அடவிநயினார்  நீர்மட்டம் 131.50 அடியாக உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிற பகுதிகளில்  பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்  வருமாறு: மணிமுத்தாறு 1, கொடுமுடியாறு  10, சேரன்மகாதேவி 5.40, ராதாபுரம்  11, களக்காடு 14.2, பாளையங்கோட்டை 10,  நெல்லை 9.40, ராமநதி, குண்டாறு தலா  2, கருப்பாநதி 3, அடவிநயினார் 5,  ஆய்க்குடி 4, செங்கோட்டை 1, தென்காசி 3.8,  சிவகிரி 16 மிமீ மழை  பதிவாகி உள்ளது. நேற்று மதியமும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை காணப்பட்டது.

Related Stories: