இது ஓர் இளவரசியின் கதை!

நன்றி குங்குமம் தோழி

பாலிவுட் உலகில் கஜினி, தங்கல், தாரே ஜமீன் பர், லகான் என விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றிப் படங்கள் தந்தவர் ஆமிர் கான். அவரது மகள்தான் இரா கான். பொதுவாக உச்சத்திலிருக்கும் நடிகர்களின் வாரிசுகளும் நடிகர்களாகத்தான் அறிமுகமாவார்கள். ஆனால் இரா கானோ, படங்களை இயக்குவதுதான் கனவு என்கிறார்.

மேடை நாடகங்களால் ஈர்க்கப்பட்டு, இப்போது புகழ்பெற்ற கிரேக்க நாடகமான Medea என்ற நாடகத்தை இயக்கி வருகிறார். இருபத்தி இரண்டே வயதான இரா கான். மற்ற ஸ்டார் கிட்ஸ் போல இல்லாமல் தனித்துவமுடன் இருக்கிறார். ஒரு பெரிய நடிகரின் மகள் என்ற அழுத்தம் எதுவும் இல்லாமல், தன் கருத்துகளைத் தைரியமாக இணையத்தில் முன்வைக்கிறார். பொதுவாக பெரிய நடிகர்களே தங்கள் காதல் வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கும்போது, இரா கான் அதை எப்போதுமே மறைத்ததில்லை.

தன் கல்லூரி காலத்தில், பல நாடகங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஒரு நாள், மும்பையில் ப்ரித்வி திரையரங்கிற்குப் போன போது, இந்த மேடையில் கிரேக்க நாடகமான Medeaவை நடத்தினால் நன்றாக இருக்கும் என்று அவருக்கு தோன்ற, உடனே அதற்கான வேலையில் ஆயுத்தமாகி

விட்டார். Medea என்பவர் கிரேக்க நாட்டின் இளவரசி.

சூரியக் கடவுள் ஹீலியோஸின் பேத்தி. கிரேக்கிலேயே துணிச்சலான மாவீரன் ஜேசனுடன் காதல் வயப்பட்டு, தன் சொந்த நிலத்தின் செல்வங்களையே திருடிக்கொண்டு கடல் தாண்டி வேறு நாட்டிற்கு காதலனுடன் தப்பிச்செல்கிறாள். சில வருடங்களில் இரு மகன்களுக்கு தாயாகிறாள். ஆனால், கணவன் ஜேசனோ, கோரிந்த் நாட்டின் இளவரசியை மணந்து, அந்நாட்டின் சக்கரவர்த்தியாக விரும்புகிறான். அதனால் மிடியாவையும், மகன்களையும் கைவிட்டு, அவர்களை நாடு கடத்தவும் திட்டமிடுகிறான்.

இந்த துரோகத்தை தாங்க முடியாமல் பெரும் கோபத்திற்கு ஆளாகும் மிடியா, ஜேசனை பழிவாங்க கோரிந்த் நாட்டின் இளவரசியையும், அவள் தந்தையையும் கொன்றுவிடுகிறாள்.

கொலை செய்தும் கோபம் தீராமல், ஜேசனை மேலும் பழிவாங்க, தன் சொந்த மகன்களையும் கொல்கிறாள். இந்த புராணக் கதை பேராசை, துரோகம், தோல்வியை தாண்டி மக்களின் பிரிவினையையும், அதன் நெருக்கடி பற்றியும் பேசுகிறது. இந்தக் கதை தற்போதைய நிகழ்காலத்திற்கும் தொடர்பிருப்பதாக நம்பும் இரா கான், இந்தக் கதையை தன் பாணியில் சொல்லவிருக்கிறார்.

இது ஆயிரம் வருடங்கள் பழமையான காலத்தில் நடந்த கதை. ஆனாலும்,  அக்கதையின் சாரம், இந்த காலத்திற்கும் தொடர்புடையதாக இருப்பதாய் இரா கான் கூறுகிறார்.

இவர், Medeaவின் கதையை தான் இயக்கும் நாடக வடிவிற்காக கொஞ்சம் சுருக்கியிருந்தாலும், கதையில் பெரிய மாற்றங்கள் செய்யவில்லை. இந்த நாடகம் முதலில் மும்பையிலும், பெங்களூரிலும் வரவிருக்கிறது. அடுத்துக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, இன்னும் சிலநகரங்களில் இந்த நாடகத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.

நடிப்பைவிட  தனக்குக் கதை சொல்வதில்தான் ஆர்வம் என்பதை இரா கான் கல்லூரியில் படிக்கும் போது கண்டுபிடித்திருக்கிறார். ஒரு நடிகரால் நடிக்க மட்டும்தான் முடியும். ஆனால் நடிப்பை தாண்டி மேடைக்கு பின்னால், ஒரு படம் முழுமையடைய பல வேலைகள் நடக்கின்றன.

ஒரு இயக்குனரால் மட்டும்தான் அந்த ஒவ்வொரு வேலையிலும் ஒரு அங்கமாக இருக்க முடியும். அதனால்தான்  இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார், இரா. ஒரு கதையை மக்களிடம் சொல்லும் போது, அது ஏற்படுத்தும் தாக்கத்தினால் மக்கள் மகிழ்ச்சியோ, துக்கமோ, கோபமோ அடைந்தால், அது தான் அவரின் வெற்றி என்கிறார்.

இயக்குனராக இந்த நாடகத்தில் வேலை செய்த போது, தந்தை ஆமிர் கான் சில ஆலோசனைகள் வழங்கியதாக கூறும் இரா, தன் பெற்றோர் இருவருமே, தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து கற்கும் சுதந்திரத்தை கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.

இரா கான் குழுவில் அனைவருமே திறமையானவர்கள், முன் அனுபவம் உடையவர்கள். ஆனால் ஒரு இயக்குனராக, இரா கான் எங்கும் தடுமாறவில்லை. இரா கான் மற்றவர்களைவிட வயதில் குறைந்திருந்தாலும், ஒரு இயக்குனராக, தன் கதையில் எந்த மாற்றமும் செய்யவிடாமல், தன் வேலையில் உறுதியாய் இருந்திருக்கிறார்.

இந்த நாடகத்தை, இரா கானின் நெருங்கிய தோழியும், கமல்-சரிகாவின் மகளுமான அக்‌ஷரா ஹாசன் தன் தாய் சரிகாவுடன் சேர்ந்து தயாரிக்கிறார். இரா கான், சரிகாவை இதில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் அவர் நாடகத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்,சரிகா, இது பற்றி கூறும் போது, ‘‘Medea பிரமாண்டமான புகழ்பெற்ற கதை. அதை 22 வயதான இரா, தன்னுடைய பார்வையில் இயக்குவது சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த புராணக் கதையை, நிகழ்காலத்துடன் சேர்த்து, இரா அழகாக உருவாக்கிஇருக்கிறார்’’ என்றார்.

Medeaவைத் தொடர்ந்து மேலும் பல நாடகங்கள் மற்றும் படங்களையும் இயக்குவதே இரா கானின் அடுத்தக்கட்ட திட்டங்கள். தன் தந்தையை வைத்து இப்போது படம் இயக்கும் திட்டங்கள் எதுவுமில்லை என்று கூறும் இரா, ‘‘எதிர்காலத்தில் இயக்குனருக்கான முழுமையான திறமைகளைவளர்த்துக்கொண்டு, நல்ல கதையுடன் அப்பாவிடம் கால்ஷீட் கேட்பேன்’’ என்கிறார் இரா கான்.

ஸ்வேதா கண்ணன்

Related Stories: