தமிழனோட வரிப்பணம் வேணும், ஆனா தமிழனோட உயிரைப்பற்றி ஒன்றிய அரசுக்கு கவலை இல்லை!: திருமுருகன் காந்தி ஆவேசம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மீனவர்களின் படகை இடித்து நடுக்கடலில் மூழ்கடித்து மீனவரை கொன்ற இலங்கை கடற்படையினரை கண்டித்து மீனவர்கள் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோட்டைபட்டினம் மீனவர்கள் கடந்த 18ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகு மீது இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதில் சுகந்தன் மற்றும் சேவியரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. மற்றொரு மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படை சடலமாக மீட்டது.

இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோட்டைபட்டினத்தில் 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மீனவர்களை சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்களை பாதுகாப்பதில் ஒன்றிய அரசு தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தமிழனோட வரிப்பணம் வேணும், ஆனா தமிழனோட உயிரைப்பற்றி ஒன்றிய அரசுக்கு கவலை இல்லை என்று திருமுருகன் காந்தி ஆவேசமாக குறிப்பிட்டார்.

இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன் வருவாய் கோட்டாட்சியர் சவுந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மீனவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் உயிரிழந்த மீனவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரும் வரையும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: