இது புது ஐடியாவா இருக்கே!: வீட்டின் மொட்டை மாடியில் நாற்றங்கால் அமைத்து மயிலாடுதுறை விவசாயி அசத்தல்..குவியும் பாராட்டுக்கள்..!!

மயிலாடுதுறை: கனமழையில் இருந்து சம்பா சாகுபடி பயிர்களை பாதுகாக்க மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வீட்டின் மொட்டை மாடியில் நாற்றங்கால் அமைத்து நடவு செய்திருக்கும் விவசாயிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தரங்கம்பாடி தாலுக்கா பெரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாலமுருகன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா, தூய மல்லி, கருப்பு கவுனி போன்ற நெல் ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து வருகிறார்.

இந்நிலையில் கனமழையில் இருந்து சம்பா சாகுபடிகளை பாதுகாக்க நினைத்த விவசாயி பாலமுருகன், தனது வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார். அதன்படி சேர் இல்லாத விவசாய முறையாக முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயந்திர நடவுக்கான நாற்றுகளை சேருக்கு பதிலாக தேங்காய் நாறு கழிவு உரம், மரத்தூள் போன்றவற்றை கொண்டு மாடியில் நெல் விதைகளை பரப்பி நாற்றுகளை உருவாக்கியுள்ளார்.

வீட்டின் மொட்டை மாடியில் நாற்றுகளுக்கு தேவையான நீரை பூவாலி வைத்து தண்ணீர் பாய்ச்சுவதாக பாலமுருகன் தெரிவித்துள்ளார். வயலில் நட்டால் நாற்றுகள் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் இவருக்கு இல்லை. மேலும் வயலில் நாற்றங்கால் விடுவதை விட மாடியில் அதை அமைக்க குறைந்த செலவே ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாடியில் நாற்றங்கால் அமைத்து நடவு செய்திருக்கும் விவசாயி பாலமுருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories:

More
>