நாடு முழுவதும் பெட்ரோல் விலை தற்போது மிக குறைவாகத்தான் உள்ளது!: உ.பி. பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு

லக்னோ: நாடு முழுவதும் பெட்ரோல் தற்போது மிக குறைவான விலையிலேயே விற்கப்படுவதாகவும், தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோலின் விலை அதிகம் இல்லை எனவும் உத்திரப்பிரதேச பாஜக அமைச்சரின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது. இந்தியாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தொடர்ச்சியாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது 100 ரூபாயை கடந்துவிட்டது. கொரோனா நெருக்கடியான காலத்திலும் பெட்ரோல் விலை உயர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை  சந்தித்து வருகிறார்கள். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை  குறைக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் கண்டனங்கள் ஒலித்து வருகிறது.

ஆனால் பா.ஜ.க தலைவர்களோ, பெட்ரோல் விலை கூடுனா சைக்கிள் ஓட்டுங்கள், இது எல்லாம் ஒரு பிரச்சனையா என்றும்  விலை உயர்வு குறித்துப் பேசுவோர் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லுங்கள் எனவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் விலை குறித்து உ.பி. பாஜக அமைச்சரின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்திரப்பிரதேச அரசில் அமைச்சராக இருந்து வரும் உபேந்திர திவாரி என்பவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவில் ஒரு சிலரே 4 சக்கர வாகனம் பயன்படுத்துவதாகவும், அவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். நாட்டின் 95 சதவீத மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை என்றும் தற்போது பெட்ரோல் மிக குறைவான விலையிலேயே விற்கப்படுவதாகவும், தனிநபர் வருமானத்துடன் ஒப்பிட்டால் பெட்ரோலின் விலை அதிகம் இல்லை எனவும் பாஜக அமைச்சர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

Related Stories:

More
>