×

இது செயல்படும் அரசு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் 1,352 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை வருகிற 26ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை வெறும் அறிவிப்பாக மட்டுமே பார்க்க முடியாது. தமிழகத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஏற்கனவே நீர்நிலைகள் முழு கொள்ளளவையும், முக்கால் அளவையும் தாண்டி நிரம்பியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை வந்து வெளுத்து வாங்கினால், நிலைமை சிரமமாகி விடும்.குறிப்பாக, 2015ல் சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதந்த  காட்சியை மறக்கவே முடியாது. இதன்பிறகு வடகிழக்கு பருவமழை என்றாலே சென்னைவாசிகள் வெடவெடத்து போகும் அளவிற்கு அந்த சம்பவம் அமைந்து விட்டது.இந்த அபாயகர சூழலில், தமிழக அரசு எடுத்து வரும் மின்னல்வேக நடவடிக்கைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளன. தமிழகம் முழுவதும் மழை பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கிவிட்டுள்ளார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் முற்றிலுமாக தூர்வாரப்பட்டு, தண்ணீரை தேக்கவும், உபரிநீர் தடையின்றி வெளியேறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்திற்கு மட்டும் 11.70  கோடி ஒதுக்கப்பட்டு வெள்ள தடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம்  ஏரியின் மதகுகளில் உள்ள அடைப்பான்கள் 2 கோடியே 24 லட்சம் செலவில்  சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏரியின் உபரிநீர் தடையின்றி செல்ல 37.50 லட்சம் செலவில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழை குறித்து வானிலை மையம் அறிவித்த அன்றைய தினமே, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான காஞ்சிபுரம் மாவட்டத்தின் செம்பரம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டத்தின் புழல் ஏரிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்துள்ளார். இங்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும் நீரை சேமித்து வைத்தால் மட்டுமே, அடுத்த ஒரு ஆண்டு முழுவதும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

 எனவே மழைநீரை சேமித்து வைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 2015 சம்பவம் போல் மீண்டும் நடக்காமல் இருக்க 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏரியின் கரைகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளார். பேரிடர் வரும் முன்பே, அதை தடுப்பதற்காக களத்தில் இறங்கி செயல்பட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு ‘‘செயல்படும் அரசு’’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Tags : This is the functioning government
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...