மக்கள் கட்டாயம் ஓராண்டுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க செல்லும் போது கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். மூன்றாவது அலை பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் ஓராண்டுக்கு கட்டாயம்  முகக்கவசம் அணிய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை மாநகராட்சி மற்றும்  தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மக்கள் நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

தொற்று நோய்க்கு கவனம் செலுத்தி வரும் நேரத்தில், தூய்மை பணியில் ஈடுபடும் பெண்களுக்கு தொற்றா நோய் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2ம் தவணை செலுத்த 57 லட்சம் பேர் தகுதி பெற்று உள்ள நிலையில், அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும். 21% மட்டுமே 2ம் தவணை செலுத்தியுள்ளனர். ஒன்றிய அரசில் இருந்து வழங்கப்படும் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில் 53.8 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. 2ம் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே 18 வயதிற்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தேசிய நிபுணர் குழு அனுமதி அளித்தவுடன் தமிழகத்தில் உடனடியாக தடுப்பூசி செலுத்தப்படும். மூன்றாம் அலையின் பாதிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்கிற நிலையில், அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மக்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டும். நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டும். தொடர் பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க செல்லும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதேபோல் ஓராண்டுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார். தொடர் பண்டிகை நாட்களில் பொருட்கள் வாங்க செல்லும் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கூடும் இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

Related Stories: