நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: மருத்துவர், செவிலியர், முன்கள பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களில் 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி, இந்தியாவில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்களுக்கும், பிப்ரவரி 2ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், முதல் 85 நாளில் 10 கோடி, அடுத்த 45 நாளில் 20 கோடி, அடுத்த 29 நாளில் 30 கோடி, அடுத்த 24 நாளில் 40 கோடி, அடுத்த 20 நாளில் 50 கோடி டோஸ் என இந்த இலக்கு ஆகஸ்ட் 6ம் தேதி எட்டப்பட்டது. அதன்பின், அடுத்த 76 நாட்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த இலக்கு மொத்தத்தில் ஒன்பது மாதங்களில் எட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் தகுதியுடைய 75 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 31 சதவீதத்தினருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகளவு தடுப்பூசி போட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் 2வது மற்றும் 3வது இடத்திலும், குஜராத், மத்திய பிரதேசம் முறையே 4வது, 5வது இடத்தில் உள்ளன. நூறு கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதை முன்னிட்டு, டெல்லியில் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு பிரதமர் மோடி நேற்று நேரடியாக சென்று, அங்கு தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார். பின்னர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில்

நடைபெற்ற விழாவில், காணொலி மூலமாக பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:தடுப்பூசி போட தொடங்கிய 9 மாதங்களில் 100 கோடி டோஸ் தடுப்பூசியை நாடு நிறைவு செய்துள்ளது. இந்த சாதனையின் மூலம் இந்தியா சவால்களுக்கு பதில் அளித்துள்ளது. தொடக்கத்தில் கொரோனாவை கையாள்வது மிகப் பெரிய பயணமாக இருந்தது. ஆனால், இந்தியா உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது. ஒரு தடுப்பூசி போட 2 நிமிடங்கள் என்று கணக்கிட்டாலும் கூட, இந்த 100 கோடி டோஸ் எண்ணிக்கையை அடைய 41 லட்சம் மனித நாட்கள் அல்லது 11 ஆயிரம் மனித ஆண்டுகளுக்கான முயற்சி தேவைப்பட்டது.

இந்த இலக்கை இந்தியா அடைய 4 ஆண்டுகள் வரையாகும், விநியோக சங்கிலிகளை நிர்வகிக்க முடியாது என்று பல்வேறு தரப்பினரும் கூறிய நிலையில், தடுப்பூசியின் செயல்பாடு மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையினால் இத்திட்டம் வெற்றி பெற்றது. `மேட் இன் இந்தியா’வுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க முன்னுதாரணம் மாற்றமாகும்.அதே போல, வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், தடுப்பூசி போடுவதற்கான தயக்கம் இந்தியாவில் குறைவாகவே இருந்தது. நாட்டின் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்திருப்பதன் மூலம் இந்தியா தற்சார்பு நிலையை எட்டியுள்ளது.இதற்காக உழைத்த விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுகள்.

இந்த முயற்சிகள் அனைத்தும் கோவின் செயலி என்னும் வலுவான தொழில்நுட்ப தளத்தின் மூலம் வலுவூட்டப்பட்டன. தடுப்பூசி இயக்கம் வெளிப்படையானதாக இருப்பதால் தேவையான இடைவெளியில் டோஸ்களை பெறுவது உறுதிப்படுத்தப்பட்டது. ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு மிகப் பெரிய பலம். இதன் மூலம் நாட்டை வழிநடத்தினால் நாடு முன்னேறும். தடுப்பூசி இயக்கம் குழு, இந்தியாவின் சக்தியை காட்டியுள்ளது. தடுப்பூசி போடுவதில், இந்தியாவின் வெற்றி ஜனநாயகத்தால் சாதிக்க முடியும் என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது டிவிட்டரில், `இந்தியா 100 கோடி டோஸ் இலக்கு எட்டியதற்கு வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் திறமையான தலைமையினால்தான் இந்த பலன் கிடைத்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

சசிதரூர் பாராட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் தனது டிவிட்டரில், `இது இந்தியர் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். இதற்கான பாராட்டு அரசுக்குரியது,’ என்று கூறியுள்ளார். ஆனால், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, `பாராட்டை பெறுவதற்கு முன்பு, பிரதமர் மோடி கொரோனா, அதன் பக்க விளைவுகளினால் பாதித்த குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாராட்டும், பெருமையும் விஞ்ஞானிகள், மருத்துவ குழுவினருக்கே உரியது,”என்று கூறியுள்ளார்.

உலக நாடுகள் பாராட்டு

இந்தியா 100 ேகாடி டோஸ் தடுப்பூசி இலக்கை சாதித்து இருப்பதற்கு அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம் போன்றவை உட்பட பெரும்பாலான உலக நாடுகள் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளன. அதேபோல், உலக சுகாதார அமைப்பும் பாராட்டி இருக்கிறது.

* இந்தியா 100 கோடி தடுப்பூசி இலக்கை எட்டிய வெற்றியைக் கொண்டாடும் வகையில், செங்கோட்டையில் 1,400 கிலோ எடையிலான 225 நீளம், 150 அடி அகலம் கொண்ட கதர் துணியிலான தேசியக் கொடி வைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கொரோனா தடுப்பூசி பற்றிய வீடியோ பாடலை வெளியிட்டார்.

* இந்த பாடலை கைலாஷ் கெர் பாடியுள்ளார்.

* இந்த பாடலில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட இதனை செயல்படுத்திய அனைத்து துறையினருக்கும் நன்றி கூறப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் இதுவரை 103.5 கோடி தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: