×

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளிகளுக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 1ம் தேதி முதல் பொதுமக்கள் கடற்கரைக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 1,170 என்ற அளவில் உள்ளது. ஆனாலும், சென்னை, கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளில் தொற்று அதிகம் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் முதல் வாரம் தீபாவளி பண்டிகை. அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ், வருடப் பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகை வர உள்ளது. இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு அதிகளவில் செல்ல வாய்ப்புள்ளது. வெளியில் செல்பவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.இந்த நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது அல்லது இன்னும் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (23ம் தேதி) காலை 11.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது, தீபாவளி பண்டிகையையொட்டி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதுதவிர, கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Tamil Nadu , On further easing of curfew in Tamil Nadu Chief Minister MK Stalin's consultation tomorrow
× RELATED செல்பி எடுத்தாலும் கட்டணுமா? ஜிஎஸ்டி...