கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரிக்கு தேர்வான உதவி பேராசிரியர்கள் உள்பட 11 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த மாதம் 4ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். முதற்கட்டமாக சென்னை மாவட்டம் கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவக்கிடவும், பி.காம். பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய நான்கு பாட பிரிவுகளுடன் கல்லூரி துவக்க உயர் கல்வித்துறை அனுமதி அளித்து கடந்த 6ம் தேதி அரசாணை வெளியிட்டது.இந்நிலையில் சென்னை, கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில், சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நில பரப்பில் கல்லூரி துவக்கிட உத்தேசிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலேயே கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் சென்னை, கொளத்தூர், எஸ்.ஜே. அவென்யூவில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக நடத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. , கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டு இன்று வரை 314 விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையே  உதவி பேராசிரியர் உட்பட 11 பணியிடங்களுக்கான நேர்காணல் கடந்த 18ம் தேதி நடத்தப்பட்டது. பல்கலை கழக விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட  குழு 284 விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வு நடத்தியது. 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், ஒரு நூலகம் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் காவேரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>