மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ஈசுவரன் விலகல்: புதிய இயக்கம் தொடங்குவதாக அறிவிப்பு

சென்னை: மதிமுகவில் இருந்து மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈசுவரன் விலகுவதாக அறிவித்துள்ளார். மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என புதிய இயக்கத்தை தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் வே.ஈசுவரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:   கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மதிமுகவில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி செயலாளர் என்று பல பொறுப்புகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன். எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. அரசியலை எனது சுய லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை என் கொள்கையாகவே வைத்துள்ளேன்.

கடந்த 28 ஆண்டுகள் எனக்கு எந்த பதவியும் கிடைக்காவிட்டாலும், ஏராளமான பொருள் இழப்புகளை சந்தித்திருந்தாலும், மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்துள்ளது. ஆனாலும் அரசியலிலும், சமூகத்திலும் நடக்கின்ற பல நிகழ்வுகள் என்னை மிகவும் கோபம் கொள்ள செய்கிறது. இயக்கத்தின் பொதுவான மனநிலைக்கும் எனது செயல்பாடுகளுக்கும் முரண்பாடுகள் வரத்தொடங்கும் போது நான் இங்கு இயங்குவது இயக்கத்திற்கும் நல்லதல்ல. எனக்கும் நல்லதல்ல. எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் எனக்கு சிறு அமைப்பாவது தேவைப்படுகிறது.

அதனால் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன். இது அரசியல் இயக்கமல்ல. ஆனால் அரசியலை தூய்மைப்படுத்தவும் பயன்படும். நான் நேசிக்கும் தலைவர் வைகோ என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை. எந்த காரணம் சொல்லியும் என்னால் சமாதானப்படுத்திக்கொள்ள இயலவில்லை. எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது என்று எதை பொதுச்செயலாளர் சொன்னாரோ அது நடப்பதற்கு முன்பே அமைதியாக சென்றுவிட நினைத்து கடிதம் எழுதினேன். ஆனால் பொதுச்செயலாளரின் காந்தக்குரல் என்னை கட்டிப்போட்டு விட்டது. இன்று கனத்த இதயத்தோடு மதிமுகவில் இருந்து விலகிக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>