நிதிவசூல், உறுப்பினர் சேர்க்கை, போலி அடையாள அட்டை வழங்கினால் நடவடிக்கை மனித உரிமைகள் என்ற சொல்லை தனியார் அமைப்புகள் பயன்படுத்த தடை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை:  மனித உரிமைகள் என்ற சொல்லை தனியார் அமைப்புகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றியம், மாநில, கவுன்சில் என்ற பெயரில் நிதி வசூல், உறுப்பினர் சேர்க்கை, போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கவும் தேசிய அளவில் டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் முறையாக சட்டப்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் மனித உரிமைகள் என்ற வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துக் கொண்டு தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்துடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இது, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு மனித உரிமைகள் என்ற சொல் தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மனித உரிமைகள் என்ற சொல்லாடலை ஏற்கனவே தங்களது பெயருடன் பதிவு செய்து பயன்படுத்தி வந்த அமைப்புகள் சொல்லாடலை தங்களது பெயரில் இருந்து நீக்கவும் பிற்காலத்தில் சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதிலிருந்து மனித உரிமைகள் என்ற வார்த்தையை நீக்க வேண்டும். மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையத்துடன் தங்களை போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு வாகனங்களின் முன்புறம், பின்புறம் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்ப் பலகை மற்றும் ஸ்டிக்கர்களை பொருத்திக் கொண்டு தங்களை பொதுஅதிகார அமைப்புகள் போல காட்டிக் கொண்டு வாகனங்களை இயக்கி வருவதாகவும், சிலர் தங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் சேர்க்கை, போலி அடையாள அட்டைகளை வழங்கி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளிலே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவம் நடந்தது. எனவே இதுகுறித்து விழிப்புணர்வு காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே தேவை. மேலும் வாகனங்கள், தனியார் அமைப்புகள் மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் கொண்டு  இயக்கினாலும் தனியார் அமைப்புகள் மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் என்ற பெயரில் செயல்பட்டாலும் பொதுமக்களை நம்ப வைத்து போலியாக நிதி வசூல் செய்வது, உறுப்பினர் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டை வழங்குதல் போன்ற முறைகளில் செயல்பட்டால் அந்த அமைப்புகள் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>