கோவையில் மதுபானம் கலந்து போதை ஐஸ்கிரீம் விற்ற பார்லருக்கு சீல் வைப்பு

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் அவினாசி ரோட்டில் பிரபலமான ஐஸ்கிரீம் பார்லர் இயங்கி வருகிறது. இந்த பார்லரில்  மதுபானம் கலந்து போதை ஐஸ்கிரீம் விற்கப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு புகார் மனுக்கள் வந்தன. இதையடுத்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த பார்லரில் அதிரடி ஆய்வு  மேற்கொண்டனர். அப்போது, மதுபானம் கலந்து போதை ஐஸ் கிரீம் விற்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடையில் இருந்து மது பாட்டில்களும் பறிமுதல்  செய்யப்பட்டன. இதையடுத்து, ஐஸ்கிரீர் பார்லருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை  லைசென்சையும் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இது பற்றி உணவுப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த பார்லரில் இருந்து காலாவதியான உணவுப்பொருட்கள் கண்டறியப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. உணவுப்பொருட்களை  கையாளும் நபர்கள் மருத்துவ தகுதிச்சான்று பெறவில்லை, முறையாக முகக்கவசம்,  கையுறை அணியவில்லை. உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரம் இன்றி உள்ளது. இதுபோன்ற குறைபாடு காரணமாக இக்கடையின் உரிமம்  ரத்து செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து,  மேல்நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: