நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அவசியம்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: நேர்மையாக பணியாற்றுவோருக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியம் என கிராம உதவியாளரை உப்பில் முட்டிபோட வைத்த வழக்கில் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள தாழனூர் கிராம உதவியாளர் பெரியசாமி. மணல் கடத்தல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். கடந்த ஜூலை 31 அன்று ஆவுடையார்கோவில் மருத்துவமனை அருகே சென்றபோது 3 பேர் கும்பல் பெரியசாமியை வழிமறித்து ஒதுக்குபுறமாக அழைத்து சென்றுள்ளது. அப்போது உப்பை தரையில் கொட்டி, அதன்மேல் பெரியசாமியை முட்டி போட வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்த வழக்கில் தொடர்புடைய காளிதாஸ் தனக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, ‘‘கிராம உதவியாளரை தாக்கி உப்பில் முட்டி போட வைத்தவர்கள் கைது செய்யப்படவில்லை. ஆனால், முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாதாரண மனிதருக்கான பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்வது அவசியம். அரசு ஊழியர்களில் பலர் தங்களது வேலையை முறையாக செய்வதில்லை. பலர் லஞ்சம் வாங்குகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்குவது அவசியம். நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிரான நிகழ்வுகள் முறையாக கையாளப்படாவிட்டால், அதிகாரிகள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்? நேர்மையான அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை  செய்ய போராட வேண்டியுள்ளது’’ என்றார். மேலும் மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி அக். 26க்கு தள்ளி வைத்தார்.

Related Stories:

More
>