காட்பாடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையிடம் 2.17 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி திருநகரைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (49). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வேலூர் கொணவட்டம் அரசு பள்ளி ஆசிரியை மகேஸ்வரி, அதிமுக உறுப்பினராக உள்ளார். அவரது கணவர் தர்மலிங்கம், ஓய்வுபெற்ற எஸ்ஐ. இருவரும் சேர்ந்து, கார், லாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பண உதவி செய்யும்படி கேட்டனர். நானும், மகேஸ்வரியும் 20 ஆண்டு காலம் பழக்கமானவர்கள்.

அதனால் நான் உறவினர்கள் மற்றும் வேலூர், சென்னையைச் சேர்ந்த நண்பர்களிடம் பணம் வாங்கியும், எங்களது சொத்தை விற்றும் 2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன்.  கடந்த ஜூன் 10ம் தேதி 2.17 கோடிக்கு மகேஸ்வரி பாண்டு எழுதி கொடுத்தார். பணத்தை திருப்பி கேட்டபோது, பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். பணம் கொடுத்த உறவினர்கள், நண்பர்கள் என்னை தொந்தரவு செய்து வருவதால் நான் மன உளைச்சலில் உள்ளேன். என்னை ஏமாற்றிய மகேஸ்வரி, அவரது கணவர் தர்மலிங்கம் மீது தக்க நடவடிக்கை எடுத்து நான் கொடுத்த மொத்த தொகை ₹2.17 கோடியை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். மகேஸ்வரியின் கணவர் தர்மலிங்கம் காவல் துறையில் வேலூர் மாவட்டத்திலேயே பணியாற்றியதால் எல்லா அதிகாரிகளையும் தெரியும், எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பாரத்துக்கொள்வேன் என்கிறார்.

பணத்தை திருப்பி கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினர். எனவே மகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிமுக உறுப்பினரும், ஆசிரியையுமான மகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: